கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 40 முன்னணி வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை; சச்சின், யுவராஜ், பி.வி.சிந்து உள்ளிட்டோர் பங்கேற்பு

டெல்லி: உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் அதிகமாக பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக திடீரென இது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 56  பேரை பலி கொண்டுள்ள இது, 2,031 பேருக்கு பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். இதனால், போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடின.

இந்நிலையில், ஊரடங்கின் 9ம் நாளான நேற்று, கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, இன்று காலை 9  மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதன்படி, காலை 9 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ  வெளியிட்டார். அதில் பிரதமர்  மோடி கூறுகையில், ஊடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகமே கவனக்கிறது. மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக மாறியுள்ளது.

ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு உங்கள் வீட்டின் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து, கொரோனா வைரஸுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைக் குறிக்க ஒரு மெழுகுவர்த்தி, அல்லது மொபைலின் ஒளிரும்  விளக்கை ஏற்றி வைக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிராக போராடும் பொதுமக்கள் இறைவனின் வடிவம். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி என்றார்.

இதற்கிடையே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது குறித்து தினமும் பிரதமர் மோடி, டாக்டர்கள், சுகாதாரத்துறையினர், தொண்டுநிறுவனங்கள், ஆன்மிக அமைப்புகள் என பல்வேறு துறையினருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது பற்றி விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், பிசிசிஐ தலைவர் கங்குலி, இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்ளிட்ட 40 முன்னணி விளையாட்டு வீரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனையில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: