×

பெண் குழந்தைக்கு 'கொரோனா', ஆண் குழந்தைக்கு ‘லாக் டவுன்’, இரட்டை குழந்தைகளுக்கு 'கொரோனா- கோவிட்'என பெயர் சூட்டல் : இந்தியாவில் நிகழும் சுவாரஸியங்கள்

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த இளம் தம்பதி, தங்களுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்டுள்ளனர். கொரோனா வைரசும், அதனால் ஏற்படும் கோவிட்-19 நோயும் உயிர்களை பலி கொண்டு உலகையே அச்சுறுத்தி வருகின்றன.கொரோனா வைரஸ், தேசிய ஊரடங்கு உத்தரவு இரண்டும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். மறக்க முடியாத இந்த நிகழ்வையே பிறந்த குழந்தைகளுக்கு பெயராக வைக்கும் சுவாரஸ்யமும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு ராய்ப்பூர் அரசு மருத்துவமனையில் ப்ரீத்தி வர்மா என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது.ஆண் குழந்தைக்கு கோவிட் என்றும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் அவர் பெயரிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அந்த தம்பதி, பணி நிமித்தமாக ராய்ப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். ஊரடங்கால் எதிர்கொண்ட சிரமங்களை குறிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இந்த பெயரை சூட்டியதாக ப்ரீத்தி வர்மா தெரிவித்துள்ளார். பின்னாட்களில் மனமாற்றம் ஏற்பட்டால் குழந்தைகளின் பெயரை மாற்ற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் தியோரியா மாவட்டத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு லாக்டவுன் என்று அவர்களது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். “என்னுடைய குழந்தை ஊரடங்கு சமயத்தில் பிறந்தான். கொரோனா தொற்று மக்களிடம் பரவாமல் தடுக்க சரியான சமயத்தில் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஊரடங்கு தேசிய நலன் மீதான அக்கறை. அதனால் எங்களின் குழந்தைக்கு லாக்டவுன் பெயர் வைக்க முடிவு செய்தோம்“ என்று குழந்தையின் தந்தை பவன் கூறினார்.

இதேப் போன்று கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயரை குழந்தையின் மாமா நித்திஷ் திருப்பதி வைத்துள்ளார்.இது குறித்து திருப்பதி கூறுகையில், “இந்த வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. உலகில் பலரை கொன்று குவித்துள்ளது. அதே சமயத்தில் நம்மில் பலருக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்துள்ளது. நம்மில் பலரை ஒன்றிணைத்துள்ளது. தீமையை எதிர்த்து போராடுவதற்கு மக்களுக்கான ஒற்றுமைக்கான அடையாளமாக இருக்க இந்த குழந்தைக்கு கொரோனா என்று பெயர் வைத்தேன்“ என்றார்.

Tags : Corona ,Locktown ,Lockdown ,baby boy ,twins ,Baby girl , Woman, child, corona, male, Locktown, twin child, Govid
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...