தொடர் கொள்ளை எதிரொலி திருச்சியில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் இட மாற்றம்

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் பாதுகாப்பு கருதி தேவர் ஹாலுக்கு மாற்றப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஒரு வாரத்துக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதால், சரக்குகள் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். கள்ள மார்க்கெட்டில் 3 மடங்கு விலை அதிகரித்து விற்கப்படுவதால், ஏழை, நடுத்தர குடிமகன்களால் அதை வாங்கி குடிக்க முடியவில்லை. இதனால் ஆங்காங்கே டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து திருடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 183 டாஸ்மாக் கடைகள் உள்ளன. மாநகரில் மட்டும் 81 கடைகள் உள்ளன. சில தினங்களுக்கு முன் உறையூர் கோணக்கரை, வரகனேரி பிச்சைநகர், திருவெறும்பூர் ஆகிய இடங்களில் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கடைகளை கண்டறிந்து அதில் உள்ள மது பாட்டில்களை வேறு இடத்துக்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. மாவட்ட டாஸ்மாக் மேலாளர் துரைமுருகன் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் 43 கடைகளில் இருந்த மது பாட்டில்கள் நேற்று பாதுகாப்பாக தேவர் ஹாலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, கூட்ட அரங்கில் வைக்கப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: