பணகுடி பகுதியில் தீவனமின்றி செத்து மடியும் கோழிகள்

பணகுடி:  144 தடை உத்தரவு காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் உள்ள பிராய்லர் கோழி பண்ணைகளுக்கு கோழி தீவனம் வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பணகுடி பகுதியில் பண்ணைகளுக்கு நாமக்கல் பகுதி பண்ணைகளில் இருந்து கோழி குஞ்சுகள் தரப்படுகின்றன. அவைகளுக்கு தினமும் தீவனம் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு 40 நாளில் கறிக்கு உகந்த கோழிகளாக வளர்த்து கடைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. தற்போது தீவனம் வருவது தடைபட்டுள்ளதால் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், இரையின்றி தவிக்கின்றன. இதுகுறித்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில், பணகுடி, வடலிவிளை, காவல்கிணறு, தளவாய்புரம், பாம்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 லட்சம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

144 தடைக்கு முன்பு தினமும் கோழிகளுக்கு தீவனம் வந்தது. தற்போது தீவனம் வருவதில்லை. இதனால் கோழிகளுக்கு உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பலரிடம் உள்ள கோழிகள் 45 நாட்களை கடந்துள்ளன. வழக்கமாக 3 கிலோ எடைக்கு மேல் இருக்கும் கோழிகள், தற்போது 1 கிலோ எடையிலேயே உள்ளது. தீவனமின்றி எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான கோழிகள் இறந்து விட்டன. அடுத்தடுத்து உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் அவைகளே இரை தேடிக் கொள்ளட்டும் என பண்ணையை விட்டு தோட்டத்தில் இறக்கி விட்டுள்ளோம். எனவே கோழிகளுக்கான தீவனங்களை தடையின்றி கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: