தோவாளை, சங்கரன்கோவில் மார்க்கெட் மூடல் கேந்தி பூ அறுவடை பாதிப்பு: செடியிலேயே கருகும் அவலம்

களக்காடு: களக்காடு சுற்று வட்டார பகுதியில் பல விவசாயிகள் கேந்தி பூக்கள் பயிர் செய்திருந்தனர். இந்த  செடிகள், 40 நாட்களில் இருந்து 50 நாட்களுக்குள் பூக்கும் தன்மை கொண்டவை.  தற்போது செடிகளில் பூக்கள் மலரத் தொடங்கி உள்ளன. இவைகளை விவசாயிகள் பறித்து  குமரி மாவட்டம் தோவாளையில் உள்ள பூ  மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடை உத்தரவு  பிறப்பித்துள்ளன. இதன் காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதுபோல கூட்டம்.  கூடுவதை தவிர்க்க தோவாளையில் உள்ள பூ மார்க்கெட்டும் மூடப்பட்டது.  இதையடுத்து பூக்களை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்கள் செடியிலேயே காய்ந்து நாசமாகி வருகின்றன.

 இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பூக்களை அறுவடை செய்ய  முடியாததால் ஒரு ஏக்கரில் செடிகளை நட்டு வளர்க்க செலவு செய்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.இதேபோல் தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பலபத்திரராமபுரம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த கேந்தி பூக்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளன. இங்கிருந்து சங்கரன்கோவில் மார்க்கெட்டுக்கு பூக்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஊரடங்கு உத்தரவால் கேந்தி பூக்களை பறிக்க முடியாமல் செடியிலேயே விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: