×

பென்னாகரம் அருகே வனப்பகுதியில் உணவின்றி குழந்தைகளுடன் தவிக்கும் மலைவாழ் மக்கள்: மாவட்ட நிர்வாகம் கருணை காட்ட எதிர்பார்ப்பு

பென்னாகரம்: பென்னாகரம் அருகே, வனப்பகுதியில் உணவு மற்றும் தங்குமிடம் இன்றி தவித்து வரும் மலைவாழ் இருளர் இன மக்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகேயுள்ள பண்ணப்பட்டி, போடூர் அருகேயுள்ள முத்தூர்பட்டி, சருக்கல்பாறை உள்ளிட்ட வனப்பகுதியில் மலைவாழ் இருளர் இன மக்கள் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் விறகு சேகரித்தல், தேன் எடுத்தல் மற்றும் பழங்கள் சேகரிப்பு போன்றவற்றை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தங்குவதற்கு வீடுகளின்றி, பாறை இடுக்குகளில் குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பண்ணப்பட்டி பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களில் 50 சதவீதம் பேருக்கு பென்னாகரம் அடுத்த மடம் செக்போஸ்ட் அருகில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், முத்தூர்பட்டி, சருக்கல்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு போடூர் பகுதியில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக, இருளர் இன மக்கள் எந்தவித வருவாயும் இன்றி, சாப்பிட உணவு கூட கிடைக்காமல் குழந்தைகளுடன் தவித்து வருகின்றனர். இதனால், வேறு வழியின்றி தங்கள் பூர்வீக இடமான வனப்பகுதிக்கே மீண்டும் திரும்பியுள்ளனர். பண்ணப்பட்டி, முத்தூர்பட்டி, சருக்கல்பாறை உள்ளிட்ட பகுதியில் குடும்பத்துடன் முகாமிட்டுள்ள மக்கள், கிழங்குகளை தோண்டி எடுத்து, சாப்பிட்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக, குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவு அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று, அங்கு நிலத்தில் ஊற்று தோண்டி அதில் கிடைக்கும் தண்ணீரை சேகரித்து, வடிகட்டி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்களது சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பீதியால், முடங்கியுள்ள மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளன. அதேபோல், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மலைவாழ் இருளர் இன சமூக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Mountain people ,forest ,administration ,Pennagaram ,District ,Mountains , Mountains,forest ,Pennagaram,mercy
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...