×

கொரோனா தொற்று பாதித்த வீடுகளில் குப்பைகள் பயோமெடிக்கல் வேஸ்ட் பைகளில் சேகரிப்பு

நாகர்கோவில்:  நாகர்கோவில் மாநகர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர் வீடுகளில் குப்பைகளை அழிக்க சிறப்பு ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டி பொட்டல், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 5 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதியில்லை. இந்தநிலையில் இவர்களது வீடுகளுக்கு உணவு பொருட்கள், காய்கறிகள் மாநகராட்சி பணியாளர்களால் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் இருந்து குப்பைகளை அப்புறப்படுத்த சுகாதாரத்துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து குப்பைகளை பெற நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வெள்ளாடிச்சிவிளையில் உள்ள இரண்டு வீடுகளுக்கும், டென்னிசன் ரோட்டில் உள்ள மூன்று வீடுகளுக்கும் மருத்துவமனைகளில் கையாளுகின்ற இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பயோமெடிக்கல் வேஸ்ட் பேக் வழங்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து வழங்கப்பட்டுள்ள இந்த பைகளில் அந்த வீடுகளில் உள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை பொதுவான குப்பைகளுடன் கலக்காமல் உரக்கிடங்கில் தனியாக கொண்டு சென்று எரியூட்டப்படும் என்று மாநகராட்சி நகர் நல அலுவலர் கின்சால் தெரிவித்தார்.

இதனை போன்றே மணிக்கட்டிப்பொட்டல், தேங்காப்பட்டணம் பகுதியில் உள்ள வீடுகளிலும் குப்பைகளை அகற்ற சுகாதாரத்துறையால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை பொது வெளியில் பிற குப்பைகளுடன் கொட்ட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : homes , Collection,biomedical,homes ,coronavirus
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை