×

ரேஷன் கடைகளில் வழங்கிய இலவச அரிசியில் கல், வண்டு

* புழுத்ததாக வழங்கியதாகவும் புகார் * பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

மதுரை: ரேஷன் கடைகளில் வழங்கிய இலவச அரிசியில் கல், வண்டு இருந்ததாகவும், புழுத்த அரிசை வழங்கியதாகவும் பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.ஆயிரம் ரொக்கம், ரேஷன் பொருட்களை நேற்று முதல் இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையான ரேஷன் கடைகளுக்கு சரக்குகள் முழுமையாக போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளுக்கு 30 முதல் 50 சதவீத பொருட்கள் மட்டும் சென்றடைந்துள்ளன.
விருதுநகர், பர்மா காலனி ரேஷன் கடை ஒன்றில் இலவசமாக வழங்கப்பட்ட அரிசி பழுப்பு நிறத்தில் கருப்பு கெடும்புகளுடன், வாடை அடித்ததாக கார்டுதாரர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

மதுரை நகரில் பெரும்பாலான கடைகளில் வழங்கப்பட்ட அரிசியில் அதிகளவு கல்லும், கருப்பு தூசிகளும் இருந்தன. பழுப்பு நிறத்தில் இருந்த அரிசி அதிக நெடியுடன் இருந்தது. இந்த அரிசி பயன்படுத்த முடியாத அளவுக்கு இருந்தால் சிலர் ரேஷன் கடையிலேயே அரிசி வேண்டாமென கூறிவிட்டனர். அரிசி தவிர்த்த மற்ற பொருட்களை மட்டும் வாங்கிச் சென்றனர்.இது குறித்து மதுரை அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த ரோட்டோர வியாபாரி ஒருவர், அனுப்பி உள்ள வாட்ஸ் அப் வீடியோவில் கூறியிருப்பதாவது: தற்போது வருமானம் இல்லாததால் எனது குடும்பம் சிரமப்படுகிறது. ேரஷனில் வழங்கப்படும் நிவாரணத்தை பெரிதும் நம்பி இருந்தேன். ஆனால், அருள்தாஸ்புரம் 5வது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் கல், வண்டுகள், கருப்பு தூசி அதிகளவில் கலந்திருந்தது. மேலும் சமைக்க முடியாத அளவுக்கு அதிக நெடி இருந்தது’’ என்றார்.

இந்த வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அவரை சந்தித்து 15 நாட்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.நிவாரண உதவி என்ற பெயரில் விலையில்லாமல் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என்பதால் இதற்காக சிரமப்பட வேண்டியதில்லை என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், ரேஷனில் வழங்கப்பட்ட அரிசி சமைக்க முடியாத அளவுக்கு இருந்ததால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags : ration shops , Free rice, beetle ,ration ,shops
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு