×

ஊரடங்கு உத்தரவு உள்ளதால் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் கடமையாற்றிய எஸ்ஐ : ஆந்திராவில் நெகிழ்ச்சி

திருமலை:  ஊரடங்கு உத்தரவு உள்ளதால் ஆந்திராவில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் எஸ்ஐ கடமையாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடாவில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சாந்தாராம். நாடு முழுவதும்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் விஜயவாடாவில்  தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாந்தாராமின் தாயார் விஜயநகரம் மாவட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நிலையில் அதிகாரிகள், சாந்தாராமுக்கு விடுமுறை வழங்கினர். ஆனால் சாந்தாராம் தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க போவதில்லை என்றும், பொதுமக்களுக்கு ஒரு இக்கட்டான சூழல் உள்ள நிலையில் நான்  பணியில் இருந்தால் மட்டுமே எனது தாயாரின் ஆத்மா சாந்தி அடையும் என்றும் தெரிவித்தார்.  

இதுகுறித்து சாந்தாராம் நேற்று கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும் என்று இருந்தால் நான்கு மாவட்டங்களில் 45 சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இங்கிருந்து நான் சென்று வருவதற்கு மூன்று நாட்கள் மீண்டும் நான் வந்த பிறகு பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

இதனால் எனது பணியை நான் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே நான் எனது பணியில் தொடர்வதே எனது தாயாரின் ஆத்மா சாந்தி அடையும் என்பதால் எனது சகோதரருக்கு தகவல் தெரிவித்து அவரை இறுதிச்சடங்கு செய்யும்படி கூறி அதன் வீடியோவை பார்த்து எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தினேன். எனவே, பொதுமக்களும் அவரவர் வீடுகளிலேயே வரும் 2 வாரங்கள் இருந்து ஊரடங்கை வெற்றி பெற செய்தால் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தாயாரின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காமல் எஸ்ஐ கடமையாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags : Andhra Pradesh ,SI ,funeral , SI,, mother,funeral,Andhra
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...