கடந்த 4 மணி நேரத்தில் 232 பேருக்கு பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301-ஆக உயர்வு; 56 பேர் பலி

டெல்லி: சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு  தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,166 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,014,499 பேர் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் 212,018 பேர் குணமடைந்தனர். மேலும் 37,698 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலும் கொரோனா ரைவஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத் அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம்  வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாள் முடக்கம், உரிய பலனில்லாமல் போயுள்ளது.

தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2069-லிருந்து 2,301-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53-லிருந்து 56-ஆக  உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பிலிருந்து 157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கொரோனாவால் 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவர்  உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் குணமடைந்துள்ளனர். 

Related Stories: