கொரோனா தொற்றை தடுக்க ஏற்கனவே கேட்ட ரூ 9 ஆயிரம் கோடியுடன் மாஸ்க், மருத்துவ உபகரணங்கள் வாங்க கூடுதலாக ரூ.3,000 கோடி வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே கேட்ட ₹9 ஆயிரம் கோடியுடன்  கூடுதலாக மருத்துவர்களுக்காக முழு கவசம், என்-95  மாஸ்க், வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க கூடுதலாக ₹3000 கோடியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  பிரதமர் மோடி நேற்று காலை 11 மணிக்கு நாடு முழுவதும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 234 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கீழ்க்கண்ட உதவிகள் கூடுதலாக தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன்.

* மருத்துவர்களுக்காக முழு கவசம், என்-95 மாஸ்க், வென்டிலேட்டர் ஆகியவற்றை போதுமான அளவு வழங்க வேண்டும். இந்த உபகரணங்களை வாங்குவதற்காக ₹3000 கோடி தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும். ஏற்கனவே தமிழக அரசுக்கு ₹9 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன்.n உள்ளூர் பொருட்களுக்கான வருவாய் பற்றாக்குறை அளவை 3 சதவீத அளவிற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

*  கொரோனா நடவடிக்கைகக்கான கூடுதல் செலவை கணக்கில் கொண்டு கொள்முதல் அளவை இந்த நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

*  2020-21ம் ஆண்டுக்கான தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முன்னதாக தர வேண்டும். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளுக்கு நிதிக்குழு அனுமதித்துள்ள தொகையில் 50 சதவிகிதத்தை உடனடியாக தமிழகத்திற்கு தர வேண்டும்.

*  டிசம்பர், ஜனவரி மாதத்திற்கான ஜிஎஸ்டி தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

*  தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

*  மத்திய ரிசர்வ் வங்கி தமிழகத்திற்கு நிர்ணயித்துள்ள நிதி அளவை 30 சதவீதமாக உயர்த்த வேண்டும். இந்த தொகையை வட்டி இல்லாமல் முன்னதாகவே வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: