கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை மக்களை துன்புறுத்துவதாக உள்ளது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கை மக்களை துன்புறுத்துவதாக உள்ளது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது சிறுசேமிப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் 7.9 சதவீத வட்டி 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது மிகுந்த கண்டனத்திற்குரியது. அதேபோல தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதை விட தொழிலாளர் விரோத நடவடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது. கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்து வாங்கும் சக்தி இல்லாமல் இருக்கிற நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகும்.

கடந்த 72 ஆண்டுகளாக நடைமுறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் நிலுவையில் இருக்கிற ₹3800 கோடியை பயன்படுத்தாமல் புதிதாக தமது பெயரில் புதிய நிதியத்தை பிரதமர் உருவாக்குவது ஏன்? 136 கோடி மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் ஒரு தனிநபரை முன்னிலைப்படுத்தி திட்டங்களை அறிவிப்பது ஏற்புடையதுதானா, கொரோனா போன்ற கொடிய நோயை எதிர்க்க தனிப்பட்ட முறையில் பிரதமரை முன்னிலைப்படுத்தாமல் ஏற்கனவே மிகச்சிறப்பாக  நடைமுறையில் இருக்கிற பிரதம மந்திரி நிவாரண நிதியை புறக்கணித்து புதிய நிதியத்தை உருவாக்கியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: