தனியார் கல்லூரிகள், விடுதிகளை கொரோனா வார்டுகளாக மாற்றக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: தனியார் கல்லூரிகள் மற்றும் மாணவர் விடுதிகளை கொரோனா நோய் தடுப்புக்கான தற்காலிக மருத்துவமனைகளாகவும், தனிமைப்படுத்துதல் வார்டுகளாகவும் மாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த மக்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, தனிமைப்படுத்தல் பிரிவுகளை அமைத்து வருகிறது. ரயில் பெட்டிகள் கொரோனா தனி வார்டுகளாக மாற்றப்படுகின்றன.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக மருத்துவமனைகளில் உள்ள இடங்கள் மட்டும் போதுமானதல்ல.

தமிழகத்தில் பல தனியார் கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் உள்ளன. இவற்றை தனிமைப்படுத்தல் பிரிவுகளாக மாற்றுவதன் மூலம் 50 ஆயிரம் படுக்கைகளை ஏற்படுத்த முடியும்.பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சொந்தமானவை என்பதால் சமூக பொறுப்புடன், அவற்றை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற ஒப்புக் கொள்வார்கள்.தனியார் கல்லூரிகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களையும் அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: