கோழி முட்டை, இறைச்சி சாப்பிடலாம் வதந்திகளை நம்ப வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்

சென்னை: கோழி முட்டை, இறைச்சியை சாப்பிடலாம் என்றும், தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் சென்னை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி வெளியிட்ட அறிக்கை:கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் கொரோனா   தொற்று நோய் பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியை பொதுமக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கோழி, முட்டை இறைச்சி சாப்பிட தயக்கம்  காட்டுவதாக தெரியவருகிறது. இது முற்றிலும் தவறான செய்தி ஆகும். வதந்திகள் மூலம் நமது புரத தேவையினை இழப்பது ஒருபுறம் இருந்தாலும், கோழி வளர்ப்பு, தொழில் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட கோழி வளர்ப்போர்களும், விவசாயிகளும் மிகவும் நலிவடைந்து மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு அவர்தம் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும். மேலும் அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது.  தற்போதைய சூழல் மனிதனுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவையான காலகட்டமாகும்.எனவே பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி உண்பதன் மூலம் கொரோனா பரவியதாக எவ்வித நிகழ்வுகளும் இதுவரை நடைபெறவில்லை. இதுகுறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம்.  எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சி உட்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: