கால் முறிவுக்கு தவறான சிகிச்சை தனியார் மருத்துவமனைக்கு ரூ.6.15 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஸ்ரீதரன் என்பவர், சென்னை ராஜ்பவன் அருகே கடந்த 15.5.2009 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில் அவரது இடது கால் உடைந்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவருக்கு மருத்துவர்கள் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருந்தும், சில நாட்கள் கழித்து காலில் வலி ஏற்பட்டுள்ளது.  இதுபற்றி அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். பின்னர், மீண்டும் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். இதற்காக மொத்தம் ₹1 லட்சத்து 50 ஆயிரத்து 491 செலுத்தியுள்ளார். இதில் 68 ஆயிரம் இன்சூரன்ஸ் கொடுத்துள்ளனர்.சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற பிறகும் கால் வலி சரியாகவில்லை. இதனால், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், இம்ப்ளான்ட் சிகிச்சை சரியாக செய்யவில்லை, எலும்பு சரியாக கூடவில்லை. இதனால், நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, என்று கூறி மீண்டும் புதியதாக நான்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதற்காக இன்சூரன்ஸ் உடன் சேர்த்து ₹3 லட்சத்து 46 ஆயிரத்து 222 செலுத்தியுள்ளார். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீதரன் தனக்கு முதலில் சிகிச்சை அளித்து, சரியாக அறுவை சிகிச்சை செய்யாத மருத்துவமனையிடம் இருந்து இழப்பீடு வாங்கி தர கோரி, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை வைத்து பார்க்கும்போது, மனுதாரர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவமனை மனுதாரருக்கு ₹6.15 லட்சம் இழப்பீட்டை வட்டியுடன் வழங்க வேண்டும், என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: