கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்கள் இறைவனின் வடிவம்; ஏப்-5ல் 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணையுங்க; பிரதமர் மோடி வலியுறுத்தல்

டெல்லி: உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் அதிகமாக பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக திடீரென இது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 53  பேரை பலி கொண்டுள்ள இது, 2,069 பேருக்கு பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். இதனால், போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடின.

இந்நிலையில், ஊரடங்கின் 9ம் நாளான நேற்று, கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் 9 மாநில முதல்வர்கள்,  மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். முதல்வர்களிடம் ஆற்றிய உரையில் மோடி கூறியதாவது: முடக்கத்துக்குப் பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் இருக்க முடியாது. அவர்களின்  நடமாட்டத்தை ஒழுங்குப்படுத்த, சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும்,’ என அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதன்படி, காலை 9 மணிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ  வெளியிட்டார். அதில் பிரதமர் மோடி கூறுகையில், ஊடங்கிற்கு மக்கள் தரும் ஒத்துழைப்புக்கு நன்றி. இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலகமே கவனக்கிறது. மற்ற நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக  மாறியுள்ளது. கொரோனா வைரசை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். கொரோனாவை ஒழிக்கும் நடவடிக்கையில் நாடே ஒன்றுபட்டுள்ளது. இந்த தருணத்தில் ஒற்றுமையின் வலிமையை நாட்டு மக்கள் உணர வேண்டும்.  

இன்று கோடிக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் இருக்கும்போது, கொரோனா வைரசுக்கு எதிராக இந்த போரில் அவர்கள் எவ்வாறு போராடுவார்கள் என்று நம்மில் சிலர் நினைக்கலாம். இதுபோன்ற கேள்விகள் உங்கள் மனதில் வரக்கூடும்?  ஆனால் தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள், நம்மில் யாரும் தனியாக இல்லை. 130 கோடி இந்தியர்களின் பலம் நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது என்றார். மார்ச் 22-ம் தேதி கொரோனாவுக்கு எதிராக போராடும் மக்களுக்கு நீங்கள் நன்றி செலுத்திய விதம் மற்ற நாடுகளால் பின்பற்றப்படும் ஒரு மாதிரியாக மாறியுள்ளது. மக்கள் ஊரடங்கு உத்தரவு மற்றும் மணிகள் ஒலித்தல் உள்ளிட்டவை சவாலான நேரத்தின் மத்தியில் அதன் ஒற்றுமையை நாட்டுக்கு உணர்த்தியது. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள்.

ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு உங்கள் வீட்டின் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து, கொரோனா வைரஸுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைக் குறிக்க ஒரு மெழுகுவர்த்தி, அல்லது மொபைலின் ஒளிரும் விளக்கை ஏற்றி வைக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஔியை பரப்பும் வகையில் டார்ச், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடும் பொதுமக்கள் இறைவனின் வடிவம். ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி என்றார்.

Related Stories: