×

கடன் சுமைதான் மேலும் அதிகரிக்கும் வட்டியை தள்ளுபடி செய்யாவிட்டால் இஎம்ஐ சலுகையால் பலனே இல்லை: ரிசர்வ் வங்கி, மத்திய அரசு உத்தரவிடுமா?

புதுடெல்லி: வட்டி தள்ளுபடி செய்யாவிட்டால் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 3 மாத இஎம்ஐ சலுகையால் சிறிதளவும் பலன் கிடையாது என்பது தெரியவந்துள்ளதால், வட்டி தள்ளுபடியை வங்கிகள் அறிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடன் சுமையில் தவிக்கும் அப்பாவி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கொரோனா பாதிப்பு காரணமாக தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் இந்தியாவில் தொழில்துறைகள் முடங்கி கிடக்கின்றன. கொரோனா இந்த முடக்கத்தை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.

இதனால் தொழில்துறைகள், நிறுவனங்களில் பணியாற்றிய பலர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக தற்காலிக, ஒப்பந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.  இந்த சூழ்நிலையில்தான் ரிசர்வ் வங்கி கடன் தவணை செலுத்த சிரமப்படுபவர்களுக்காக 3 மாத இஎம்ஐ சலுகையை அறிவித்தது. இதன்படி வங்கிகளில் வீடு, வாகன கடன்கள், தனிநபர் கடன்கள் வாங்கியவர்கள் 3 மாதத்துக்கு கட்டாவிட்டாலும்  வங்கிகள் சிபிலில் புகார் செய்ய மாட்டார்கள். கடன் செலுத்த தவறியவராக  நடவடிக்கை எடுக்க முடியாது. இதுஒன்றுதான் இதில் ஆறுதல் விஷயம்.

 மற்றபடி, இந்த சலுகையை பயன்படுத்தினால், இந்த 3 மாத சலுகைக்கு ஈடாக 8 முதல் 10 மாதங்கள் அதிகமாக இஎம்ஐ செலுத்த வேண்டி வரும். அதாவது, 15 ஆண்டில் திருப்பிச்செலுத்தும் வகையில் 30 லட்சம் வீட்டுக்கடன் வாங்கியவர், 2.34 லட்சம் அதாவது, 8 முதல் 10 மாத இஎம்ஐ கூடுதலாக செலுத்த வேண்டும். வங்கிகளின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சலுகை என்பது உண்மையில் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், இந்த இஎம்ஐ அவகாசத்தால் கடன் சுமைதான் அதிகரிக்கிறது. பெயரளவில் உள்ள இந்த அறிவிப்பால் பலன் எதுவும் இல்லை.

எந்த வகையில் பார்த்தாலும் வங்கிகளுக்குதான் லாபமானதாக இந்த அறிவிப்பு உள்ளது. எனவே, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, வருவாய் பாதிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு வங்கிகள் கடன் தள்ளுபடி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என அப்பாவி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ரொம்ம்ம்ப பண கஷ்டம்னா ஓகே சொல்லுங்க...
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இஎம்ஐ சலுகையால் கடன் சுமை அதிகரிக்கும் என்பதால், பணம் இருப்பவர்கள் கட்டிவிடுவது நல்லது. கொரோனா பாதிப்பால் வருவாய் இழந்தவர்கள், எந்த வகையிலும் கடன் தவணை செலுத்துவதற்கு பணத்தை புரட்ட முடியாதவர்கள் வேண்டுமானால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம் என இந்திய வங்கிகள் சங்கமே அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுரையை புறக்கணித்தால் லோபிக்கு இரட்டிப்பு செலவுபோல் ஆகிவிடும்.

சலுகையை பயன்படுத்தினால் என்னவாகும்?
எஞ்சிய தவணை    சலுகை மாதங்கள்    திருத்திய தவணை    கூடுதலாக செலுத்த வேண்டிய இஎம்ஐ
36    3    40    1
60    3    65    2
120    3    128    5
180    3    191    8
240    3    258    15
* ஆண்டுக்கு 8.5% வட்டி விகிதத்தின்படி


Tags : EMI ,Reserve Bank of India ,Central Government ,Central Bank , Corona, Credit, EMI, Reserve Bank, Central Government
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு