எம்பி, மாவட்ட அலுவலகங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல்

சென்னை: கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு திரட்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என கட்சி அமைப்புகளையும் ஆதரவாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. முதல்கட்டமாக  மாநிலக் குழு ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குகிறது.

இதன் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, தலைநகர் சென்னையில் 43, டாக்டர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தியாகராயர் நகரில் உள்ள கட்சி மாநில அலுவலமான பாலன் இல்லம் அடுக்ககத்தில் 2ம் தளம் மற்றும் 4ம் தளம் ஆகிய  14,000 சதுர பரப்பளவு கொண்ட இரு தளங்களையும் அரசு பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இரு தளங்களின் இரு திசைகளிலும் மின்தூக்கி, குடி தண்ணீர், காற்றோட்ட வசதி உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தை தென்சென்னை மாவட்ட செயலாளர் ஏழுமலை, வடசென்னை மாவட்ட மேலாளர் மூர்த்தி ஆகியோர் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து வழங்கினர்.

அப்போது இதேபோன்று வேறு அமைப்புகளும் ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளன. அரசுடன் கலந்து பேசி உரிய  முறையில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும், திருப்பூர் மாநகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், கோவை மாநகரில் உள்ள கோவை ஜில்லா மில்தொழிலாளர் சங்கம், ஈரோடு மாநகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகம், விழுப்புரம், சிவகங்கை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றை கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் கடிதங்கள் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

Related Stories: