கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை: மத்திய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறுவோர் மீது ஐபிசி மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்,’ என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் முழு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி கடந்த 25ம் தேதி அமல்படுத்தினார். மக்கள் அனைவரும் அத்தியாவசியமின்றி வெளியில் வர வேண்டாம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்கின்றன.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியில் வரும் பொதுமக்கள், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. சிலர் அநாவசியமாக சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். வாகனங்களில் அதிவேகமாக பயணம் செய்கின்றனர். சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தும் போலீசாரை தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. சாலையில் தேவையில்லாமல் சுற்றித் திரியும் நபர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டியும் கூட முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த முடியவில்லை. இது தொடர்பான புகார்கள் குவிந்து வரும் நிலையில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம் என உள்துறை அமைச்சக சுற்றறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 24ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு 51 மற்றும் 60ன்படியும், இந்திய தண்டனை சட்டம் (ஐபிசி) சட்டப்பிரிவு 188ன் படியும் நடவடிக்கை எடுக்கலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, ஊரடங்கை அமல்படுத்தும் அரசு அதிகாரிக்கு தடையாக இருந்தாலோ, அவரது உத்தரவுகளையும் அரசு விதிமுறைகளையும் மதிக்காமல் நடந்து கொண்டாலோ ஓராண்டு சிறை, அபராதம் விதிக்கலாம். அதேபோல், ஊரடங்கை மீறுவோரால் பெரிய அசம்பாவிதம் நேர்ந்தால் அவர்களுக்கு 2 ஆண்டு வரை தண்டனை வழங்கலாம்.

தவறான தகவல் பரப்புவோருக்கும், பேரிடர் காலங்களை பயன்படுத்தி பணம் அல்லது பொருள் முறைகேட்டில் ஈடுபடுவோருக்கும் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம். இந்த சட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு சென்று, ஊரடங்கை உத்தரவு மீறலை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், அரசு உத்தரவுகளை மதிக்காத, கடமையை செய்ய மறுக்கும் அதிகாரிகளுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடமுண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார். எனவே, இனிவரும் நாட்களில் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தக் கூடும்.

இன்று காலை 9 மணிக்கு பிரதமரின் குட்டி வீடியோ:

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் தனது டிவிட்டரில், ‘இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு, சக இந்தியர்களுடன் சிறிய வீடியோ ஒன்றை பகிர உள்ளேன்,’ என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ எதைப் பற்றியது என்பது குறித்து எந்த தகவலையும் பிரதமர் மோடி குறிப்பிடவில்லை.

Related Stories: