கொரோனா வைரஸால் இத்தாலியில் மட்டும் ஏன் இத்தனை உயிரிழப்புகள்..?

சென்னை: உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இத்தாலியில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான தூரத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது எப்படி என்பது குறித்த ஆய்வு வெளியாகி உள்ளது. பொதுவாகவே இத்தாலியர்கள் தமது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். அங்கு ஏராளமான மருந்துக் கடைகள் உள்ளன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் சுகாதாரமாக வாழ்வது எப்படி என்று ஆலோசனைகளை விடாமல் வழங்கிக் கொண்டிருப்பார்கள். இத்தாலியர்களை பொறுத்தவரையில் ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும்தான் உலகெங்கும் தொற்று நோய்களை பரப்புபவர்கள் என்ற எண்ணம் இத்தாலியர்களுக்கு காலம் காலமாகவே இருந்து வருகிறது.

இந்த தவறான எண்ணம்தான் இப்பொழுது அந்நாட்டு மக்களை பெருமளவு பலிவாங்கி வருகிறது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வருவதாக செய்தி வெளியாகத் தொடங்கியதும் மற்ற நாடுகளைப் போல் இத்தாலியர்களும் கொரோனா தொற்று நோயை சீனர்கள்தான் வேண்டுமென்றே உலகெங்கும் பரப்புகிறார்கள் என்றே ஆரம்பத்தில் நினைத்தார்கள். எனவே இத்தாலியில் வசிக்கும் சீனர்களையும் சீனர்கள் வசிக்கும் குடியிருப்புகளையும் மட்டுமே கொரோனா வைரஸ் இருக்கும் இடமாக நினைத்தார்கள். ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கள் நாட்டில் உள்ள சீனர்களை மட்டுமே தனிமைப்படுத்தினால் போதும். நோய் பரவ விடாமல் தடுத்து விடலாம் என்றுதான் இத்தாலியர்கள் நினைத்தார்கள். இதன் ஒரு பகுதியாகவே ஐரோப்பாவிலேயே முதல் முறையாக சீனாவுடனான விமான சேவையை இத்தாலி துண்டித்தது.

தங்கள் நாட்டுக்கு எப்பொழுதும்போல் வருகைத் தந்த சீன சுற்றுலா பயணிகளையும் உடனடியாக அவர்களது தாய்நாட்டுக்குத் திரும்ப உத்தரவிட்டது. பொது மக்கள் சீன உணவகத்துக்கு செல்வதையும், சீனக் கடைகளில் பொருட்களை வாங்குவதையும் தவிர்க்கத் தொடங்கினர். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இத்தாலியர்கள் உணர்வதற்குள் காலம் கடந்துவிட்டது. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலி முழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு நோய் தொற்றி விட்டது. ஆயிரக்கணக்கானோர் இறக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் கொரோனா அறிகுறிகள் தென்பட்ட போதெல்லாம் இத்தாலி நாட்டு மருத்துவர்கள் அதை சாதாரண சளிக்காய்ச்சல் என்றே கருதி அலட்சியமாக இருந்தார்கள்.

அப்பொழுதே கோவிட் டெஸ்ட் எடுக்கத் தொடங்கியிருந்தால் இவ்வளவு பெரிய உயிர் சேதத்தை தடுத்திருக்கலாம் என இப்பொழுது காலம் கடந்து யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

வடக்கு இத்தாலியில், எங்கோ ஒரு மூலையில் உள்ள பகுதியில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அந்த இடங்களுக்கு எந்தவொரு சீனரும் செல்லவில்லை. முதன்முதலாக தொற்றுதலுக்கு உள்ளானவர் 38 வயதுள்ள சாதாரண தொழிலாளி. இவர் தன் வாழ்க்கையில் ஒருநாள் கூட சீனாவுக்கு சென்றதில்லை. ஆரம்பத்தில் நோய் அறிகுறி காணப்பட்டாலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர் சாதாரண சளிக்காய்ச்சல் என்று அலட்சியமாக இருந்துவிட்டார். எனவே அந்த இளைஞரும் எந்தக் கவலையும் இல்லாமல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். அத்துடன் கால்பந்தாட்ட போட்டி ஒன்றையும் பார்க்க சென்றிருக்கிறார். விளைவு... அந்த இளைஞரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

பிப்ரவரி மாதக் கடைசியில் விழித்தெழிந்த இத்தாலி அரசு, உடனடியாக பலரை பரிசோதிக்கத் தொடங்கியது. மூன்றாயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தினார்கள். ஆனால், அதற்குள் நிலைமை கை மீறி விட்டது. மிலான் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. அதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகள் இத்தாலியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டன. கொரோனா வைரஸுக்கு இனமோ, மதமோ, மொழியோ; ஏழை பணக்காரன் என்ற பாகுபாடோ இல்லை. அது சகலரையும் தாக்கி அழிக்கத் துடிக்கும் வைரஸ் என்பதை காலம் கடந்து இத்தாலி உணர்ந்திருக்கிறது. இப்பொழுது எந்த சீனர்கள் வழியாக கொரோனா தொற்று பரவுவதாக இத்தாலி நினைத்ததோ, அதே சீனாதான் இத்தாலிகளுக்கு மருத்துவரீதியாக உதவ முன்வந்திருக்கிறது.

Related Stories: