மரண பீதியில் உலகமே ஆடிப்போய் கிடக்கும் நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் சீசன் 2 தீவிரம்: 1,541 பேருக்கு என்ன நோய்தொற்று என்றே தெரியவில்லை

பீஜிங்: கொரோனாவால், மரண பீதியில் உலகமே ஆடிப்போய் கிடக்கும் நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் சீசன் 2 தீவிரமடைந்துள்ளது. 1,541 பேருக்கு என்ன நோய்தொற்று என்றே தெரியாததால் மருத்துவர்கள் திகைத்து வருகின்றனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததால், மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாத வகையில் 1,541 பேர் மர்மமான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயைக் கட்டுப்படுத்திய நாட்டில் மீண்டும் இரண்டாவது அலையை வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா வைரஸ் அறிகுறியற்ற 1,541 நோயாளிகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேருக்கு புதிய பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள், 43,000க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு உடனடி அறிகுறிகள் எதுவும் இல்லை. கொரோனா அறிகுறியற்ற நபர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது. ஒரு நுண்ணுயிரிக்கு எதிராக ஆன்டிபாடிகள் இருப்பதைக் கண்டறிய சீனா தனது மக்கள்தொகையில் பெரிய அளவிலான ‘செரோலாஜிக்கல்’ சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறாரா? என்பதை அறியத்தான் ‘செரோலாஜிக்கல்’ சோதனை செய்யப்படுகிறது.

அறிகுறி இல்லாத நோயாளிகளின் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலை சீனா முடுக்கிவிட்ட நிலையில், அதன் ஒட்டுமொத்த நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சில கொரோனா அறிகுறியற்ற நபர்கள் தங்கள் நெருங்கிய தொடர்புகள் மூலம் ‘இரண்டாம் தலைமுறை’ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறைந்துவிட்டாலும், அறிகுறியற்ற நபர்கள் குறித்த கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்கும், அவர்கள் மீது கட்டுப்பாட்டை கடுமையாக்குவதற்கும் சீன அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்த நிலையில் உள்ள நபர்களிடம் இருந்து, உயிருள்ள கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக சீன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், அறிகுறி இல்லாத ஆனால் உயிருடன் வாழும் வைரஸ்களால் பாதிக்கப்பட்ட நபர்களின் புள்ளிவிபரங்களை சீன அரசு தயாரித்து வருகிறது. சீனாவில் இந்த புதிய தகவல் கொரோனா வைரஸ் பரவுவதை ‘இரண்டாவது அலை’ என்று பகுப்பாய்வு குழுவும் தெரிவிக்கிறது. அதன்படி, 1,541 பேர் அறிகுறியற்ற வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 205 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த பிறகும், வெளியாட்களிடமிருந்து வரும் பாதிப்பு எண்ணிக்கை 806 ஆக உயர்ந்து 7 பேர் இறந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 3,312 ஆகவும், உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 81,554 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: