ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்: இணையதள நாளிதழ் வயர் மீது உ.பி. அரசு வழக்குப்பதிவு செய்ததற்கு ப.சிதம்பரம் கண்டனம்

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரை கொரோனா வைரசால் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் உயிரிழந்துள்ளனர். 151 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வைரஸ்  பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த மார்ச் 24-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று (கடந்த 24-ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14  -ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று அறிவித்தார்.

அதே நேரம், கொரோனா பரவலின் வேகமும் நாடு முழுவதும் தற்போது தீவிரமாகி வருகிறது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிஹ் ஜமாத் அமைப்பு நடத்திய மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம்  வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆனால், அதே நேரத்தில் நடந்த மற்றும் பல நிகழ்ச்சிகளால் எந்த பாதிப்பும் வரவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக தி வயர் என்ற ஆங்கில இணையதள  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், டெல்லியில் மாநாடு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ராமநவமிக்காக யாத்திரை நடத்த யோகி ஆதித்யநாத் தயாராகி வந்தார். மார்ச் 24ம் தேதி பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். ஆனால்  அயோத்தியில் ராமர் சிலையை தற்காலிகமாக வேறு இடத்தில் நிறுவும் நிகழ்ச்சியில் ஏராளமான அதிகாரிகளுடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார் என்று குறிப்பிட்டிருந்தது.

       

தொடர்ந்து, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற மத நிகழ்ச்சி தொடர்பாக கேள்வி எழுப்பிய தி வயர் ஊடகத்தின் மீது 188 வது பிரிவுகளின் கீழ் (அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுகிறார்) மற்றும் இந்திய  தண்டனைச் சட்டத்தின் 505 (2) (பொது குறைகூறலுக்கு காரணமான அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் பைசாபாத் கோட்வாலி காவல் நிலைய பொறுப்பாளர் நிதீஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

இந்நிலையில், இணையதள நாளிதழ் வயர் மீது உத்திரப்பிரதேச அரசு வழக்கு தொடர்ந்துள்ளதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவரும் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மைத் தகவல்கள் அடங்கிய  கட்டுரையை வயர் இணையதள இதழ் வெளியிட்டுள்ளது. உண்மையை வெளியிட்ட இணையதள இதழ் மீது வழக்கு தொடர்ந்து இருப்பது ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல். வயர் இணையதள இதழ் மீது தொடர்ப்பட்ட வழக்கை  உத்திரப்பிரதேச அரசு திரும்பப்பெற ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: