கொரோனா முடக்கத்தால் உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படும்: ஐ.நா எச்சரிக்கை

பாரீஸ்: கொரோனா பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் முடக்கத்தை அறிவித்துள்ளன. இதனால் சர்வதேச வர்த்தகம், உணவு சப்ளை ஆகியவை மந்தமாக நடந்து வருகிறது.  மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்கி குவிப்பதால், பல நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகள் காலியாக உள்ளன. உணவுப் பொருட்கள் கிடைப்பதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டால், உலக நாடுகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும். இது சர்வதேச சந்தையில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தலைவர் கு டாங்யு, உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதானம், உலக வர்த்தக அமைப்பின் இயக்குனர் ராபர்ட்டோ அசேவோடே ஆகியோர் கூறியுள்ளனர்.

Advertising
Advertising

அவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா முடக்கத்தின் காரணமாக உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க, வர்த்தகம் சுமூகமாக நடப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.  மக்களின் சுகாதாரத்தை காக்க, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில், வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.  நீண்டகால முடக்கம், பயண தடை ஆகியவற்றால் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால், சந்தைகளுக்கும் உணவு பொருட்கள் வராது.

எல்லைகள் முடக்கம், விவசாய தொழிலாளர்களின் பயண முடக்கம் ஆகியவை விவசாய பொருட்களை வீணாவதை அதிகரிக்கும்.  அதனால், உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாத்து, உணவு சப்ளையை பராமாரிக்க வேண்டும். இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம், அத்தியாவசியப் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறையை உருவாக்கி, பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது.  இவ்வாறு கூட்டறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: