கொரோனாவால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?; அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி..!

டெல்லி: கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஓரே நாளில் இந்தியாவில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,637-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 132 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு கூறுகையில்; தற்போது நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், வைரஸ் பரவும் பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் வைரஸ் மேற்கொண்டு பரவாமல் தடுக்க மக்கள் கூடுவதை தவிர்க்கவும், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை கண்டறியவும் கடுமையான யுக்திகளை அரசு கையாண்டு வருகிறது என கூறியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மாநில நிலவரங்கள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காலை 11-மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் துணை ராணுவத்தை மாநிலங்களில் கொண்டு வருவது, டெல்லி மாநாடு விவகாரம், ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று டெல்லி மத மாநாடு குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியுடன் அமைச்சரவை செயலாளர் இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: