இஸ்லாமியர்களின் உடல்நலத்தைக் காக்க விரும்புகிறோம்: ஹஜ் புனித யாத்திரையை ஒத்திவையுங்கள்...சவுதி அரேபியா வேண்டுகோள்

ரியாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் பயணத்தை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்கும்படி சவுதி அரேபியா அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் தாக்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம்  முழுவதும் 202 நாடுகளுக்கு மேலாக பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு  உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,107 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து  917 பேரை பாதித்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 035 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு  35 பேர் உயிரிழந்துள்ளனர். 1547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 124 பேர்  குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சவுதி அரேபியாவிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சவுதி அரேபியாவில் இதுவரை 1563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க சவுதி அரசு  தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ரியாத், மெக்கா, மதினா நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இஸ்லாமியர்களில் புனிதத் தலமான மெக்கா சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் முழுவதும் உம்ரா பயணம்  மற்றும் வருடத்துக்கு ஒரு முறை ஹஜ் பயணம் என இஸ்லாமியர்கள் லட்சக்கணக்கில் வருவது வழக்கமாகும். இஸ்லாமியர்கள் அதிகம் கூடும் மெக்காவில் மக்கள் அதிக அளவில் கூடினால், கொரோனா எளிதில் பரவக்கூடும் என்பதால், இந்த  வருடம் உம்ரா பயணத்துக்கு யாரும் வரக்கூடாது என கடந்த மாதம் உம்ரா பயணத்தை சவுதி அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சவுதி அரேபியா அமைச்சர் முகமது பென்டன், சவுதி அரேபிய அரசு உம்ரா மற்றும் ஹஜ் பயணிகளுக்குச் சேவை செய்ய எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் தற்போது உலக அளவில்  கொள்ளை நோய் பரவி வருகிறது. இஸ்லாமியர்கள் மற்றும் சவுதியில் வாழும் மக்களின் உடல்நலத்தைக் காக்க விரும்புகிறது. எனவே, ஹஜ் பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இந்த ஆண்டு ஜூலை  இறுதியில் ஹஜ் புனித யாத்திரை தொடங்கவிருக்கும் நிலையில், அதனை இஸ்லாமியர்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் முகமது பென்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹஜ் புனித யாத்திரை:

ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன்  வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். உடல் நலமும் பணவசதியும் உள்ள இசுலாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு  முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும். ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் (அல்லாஹ்) அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது. துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை சவூதி அரேபியாவிலுள்ள மினா,  அறஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவது, அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, மக்கா நகரிலுள்ள திருக் கஃபாவைத் தவாஃப் செய்வது ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த புனிதப் பயணமானது ஹிஜ்ரி நாட்காட்டியின் படி 12 வது மாதமான துல் ஹஜ் 8 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும். ஹிஜ்ரி நாட்காட்டி சந்திர நாட்காட்டி என்பதால் ஆங்கில நாட்காட்டியை விட இது பதினொரு  நாட்கள் குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியில் இந்த நாட்கள் மாறி வரும். இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் ஒவ்வொரு இஸ்லாமியரும் இஹ்றாம் என்னும் புனித நிலையில் இருக்க வேண்டும்.

Related Stories: