தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் யானைகள் மோதலில் கர்ப்பிணி யானை பலி: இறந்த நிலையில் வயிற்றில் குட்டி இருந்தது

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, சக யானையுடன் ஏற்பட்டமோதலில், காயத்துடன் உயிருக்கு போராடிய கர்ப்பிணி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அந்த யானையின் வயிற்றிலேயே 20 மாத குட்டியும் பலியானது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, மாரசந்திரம்உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை யானைகள்முகாமிட்டு வருவது வழக்கம். கர்நாடக வனப்பகுதியில் இருந்து ஓசூர் வழியாக ஜவளகிரி, காப்பு காட்டிற்குள் அதிகமாக நுழைகிறது. மேலும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், இரவு மற்றும் அதிகாலையில் அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி செல்கின்றன. இதனால் விவசாயிகள் அதிகம் பாதிக்கின்றனர். வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் இருந்தாலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர் காப்புக்காட்டில், கடந்த ஒரு வாரமாக, 15 யானைகள் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்துவருகின்றன. தகவலின் பேரில் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து அவைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை ஆலள்ளி காட்டில் ஒரு பெண் யானை உடல் நிலை பாதிக்கப்பட்டு படுத்த நிலையில் எழுந்திருக்க முடியாமல் கிடப்பதாக தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையில், வனவர் கதிரவன், வனகுழுவினர்ஆலள்ளி காட்டிற்கு சென்றனர். அங்கு கிடந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.காயமடைந்த யானை 12 முதல் 14 வயது வரையுடையது என்றும் அது பெண் யானை என்றும் தெரியவந்தது. மேலும், இந்த யானைக்கும், மற்றொறு யானைக்கும் இடையே ஒன்று அல்லது 2 நாட்களுக்கு முன் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஈடுபட்ட யானை, பெண் யானையை கால் பகுதியில் பலமாக தாக்கியுள்ளது. இதனால் யானை எழுந்திருக்க முடியாமல் படுத்து கிடப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, உயிருக்கு போராடிய பெண் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிசிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அந்த யானை உயிரிழந்தது. தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அந்த யானையின் வயிற்றில் ஆண் குட்டி இருந்தது தெரிய வந்தது. பிரசவிக்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், தாய் யானை இறந்ததால் 20 மாத ஆண் குட்டியும் வயிற்றிலேயே உயிரிழந்திருப்பதை கண்டு வனத்துறையினர் கண்ணீர் வடித்தனர். பின்னர், குட்டி மற்றும் தாய் யானை உடலை அப்பகுதியிலேயே குழிதோண்டி புதைத்தனர். யானைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் வயிற்றில் 20 மாத ஆண் குட்டியுடன் கர்ப்பிணி யானை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: