தேசிய ஊரடங்கு உத்தரவால் கேரளாவில் இடம், உணவின்றி தமிழக தொழிலாளர்கள் தவிப்பு: நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் அவலம்

மூணாறு: உணவு, தங்க இடம் கிடைக்காமல் நடைபயணமாக கேரளாவில் இருந்து ஏராளமான தமிழக தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு, அவர்களின் உரிமையாளர்கள் உணவு மற்றும் தங்கும் வசதி செய்து தரவேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ஆனால், இடுக்கி மாவட்டத்தில் பல இடங்களில் வேலைக்கு வந்த தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்க இடம் மற்றும் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தொடுபுழா பகுதியில் அன்னாசி பழத்தோட்டங்களில் வேலை செய்தனர். தற்போது அவர்கள் உணவு கிடைக்காமல், 3 நாட்களாக தமிழக, கேரள எல்லைப்பகுதியான போடிமெட்டுக்கு நடந்தே சென்றுள்ளனர்.

Advertising
Advertising

இதையறிந்த சாந்தன்பாறை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களை மீட்டு உணவு மற்றும் குடிநீர் வழங்கினர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களுக்கு உடல்நலன் பாதிப்பில்லை என்று உறுதி செய்த பின்னர் தமிழகத்திற்கு செல்ல அனுமதித்தனர். அந்த தொழிலாளர்கள் மேலும் பல கி.மீ பயணம் செய்தால் மட்டுமே தமிழகம் சென்றடைய முடியும்.இதுகுறித்து உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளி தெய்வம் கூறுகையில், ``கேரள அரசு வெளிமாநில தொழிலாளர்களுக்கு ‘கம்யூனிட்டி கிச்சன்’ சேவையை அறிமுகப்படுத்தியும் எந்த உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. குடிநீர் வாங்கக்கூட பணமில்லை. வேலை செய்யும் இடத்தின் உரிமையாளர்கள் எங்களுக்கு உணவு, தாங்கும் இடம் தராத காரணத்தால் 3 நாட்கள் பட்டினி கிடந்தோம். உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக நடந்தே சென்றோம்’’ என்றார்.வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கேரள அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்று தமிழக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: