டெல்லி மாநாட்டுக்கு சென்ற 154 பேர் தீவிர கண்காணிப்பு

மதுரை:  டெல்லியில் நடந்த மத மாநாட்டுக்கு சென்று திரும்பிய மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் இருந்து 154 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஐ தாண்டி விட்டது. இந்நிலையில் டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கண்டறியும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, மேலூர் மற்றும் நகர் பகுதிகளில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு 15 பேர் சென்று திரும்பி உள்ளனர். இவர்கள் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.  

Advertising
Advertising

திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி, சாணார்பட்டி, செம்பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 90 பேர் டெல்லியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஊர் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்கட்டமாக இவர்களில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என பரிசோதனை செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இவர்களது குடும்பத்தாருக்கும் ரத்தப்பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை - மதுரைரோடு ஜின்னா தெருவில் வசிப்பவர் 40 வயதானவரும் டெல்லி சென்று வந்துள்ளார். இவரையும் தனிமைப்படுத்தி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கடந்த 25ம் தேதி சொந்த ஊர்களுக்கு திரும்பிய போடி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்ய மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையில் இருந்து நான்கு பேர், காரைக்குடியில் இருந்து 11 பேர் உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 26 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களது வீடுகளில் இருந்து அழைத்து சென்றனர். அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதி பங்களா ரோட்டை சேர்ந்த 3 பேர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: