ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : பாதித்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்வு

திருமலை: ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,600ஐ நெருங்கிவிட்டது. 124 பேர் இந்த நோய் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி இரவு 9 மணி முதல் இன்று காலை 9 மணி வரை எடுக்கப்பட்ட சோதனையில் புதிதாக 43 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நடந்த மத வழிபாட்டில்  ஆந்திர மாநிலத்திலிருந்து 711 பேர் சென்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 122 பேர் மருத்துவமனைகளிலும், 207 பேர் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட  பகுதியிலும், 297 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 85 பேர் எங்கு உள்ளார்கள் என்பது குறித்து தெரியப்படாத நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சித்தூர் மாவட்டம் 20, அனந்தபுரம் 1, கடப்பா 17, குண்டூர்  22, குண்டூர் புறநகர் 20, கிருஷ்ணா 1, மேற்கு கோதாவரி 1, ராஜமகேந்திரவரம் 3 பேர் என மொத்தம் 85 பேர் எங்கு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் தேடி வருகின்றனர்.

Related Stories: