ஆழ்கடலில் மீன்பிடித்து திரும்பிய 8 மீனவர்கள் தனி முகாமில் தங்க வைப்பு: பாம்பனில் பரபரப்பு

ராமேஸ்வரம்: ஆழ்கடலில் மீன் பிடித்து திரும்பிய 8 மீனவர்கள் திருப்புல்லாணி முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன் ஆழ்கடல் மீன்பிடிப்படகில் நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் 8 பேர், கடந்த 12ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் 17 நாட்கள் இரவும் பகலுமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இவர்கள் நேற்று முன்தினம் மூக்கையூர் துறைமுகத்திற்கு பிடிபட்ட மீன்களுடன் வந்து சேர்ந்தனர். 8 பேரையும் இப்பகுதி மீனவர்கள் கரையிறங்க விடாமல் தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி நேற்று ராமேஸ்வரம் தீவில் உள்ள பாம்பன் துறைமுகத்தை வந்தடைந்த மீனவர்கள், படகில் இருந்து கரைக்கு இறங்கி வரவும், மீன்களை இறக்கவும் அனுமதி கேட்டனர். தொடர்ந்து உயரதிகாரிகளின் உத்தரவுப்படி படகில் இருந்த மீனவர்கள் 8பேரும் படகில் இருந்து இறங்கி கரைக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அவர்களுக்கு பாம்பன் துறைமுக கடற்கரையில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்தனர். பின்னர் வேன் மூலம் ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமிற்கு தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டனர். மீனவர்கள் தனிமைப்படுத்துதலுக்கு அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்ட நிலையில், படகில் பிடித்து வரப்பட்ட டன் கணக்கிலான மீன்களை கரையில் இறக்குவதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால் மீன்கள் படகிலேயே குளிர்சாதன அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: