ராணிப்பேட்டை அருகே கொரோனாவுக்கு மருத்துவம் போலி டாக்டர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் கொரோனாவிற்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் நேற்று கைது செய்தனர். ராணிப்பேட்டை அடுத்த அம்மூரில் தனியார் மருத்துவமனை வைத்து நடத்தி வருபவர் மாதவன்(33). இவர் கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறி கட்டணமாக ₹400 முதல் ₹500 வரை வசூலிப்பதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் மற்றும்  அனைத்து மருத்துவமனைகளுக்கான தொடர்பு அதிகாரி பிரகாஷ் ஐயப்பன் ஆகியோர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, மருத்துவமனையில் இருந்த மாதவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அவரது சொந்த ஊர் சோளிங்கர் தாலுகா கொளத்தேரி என்பதும், இவர் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு அம்மூர், சோளிங்கர் சாலையில் மருத்துவமனை நடத்தி வந்தது தெரிந்தது. இவர் ஒன்றரை வருடம் பி பார்ம் படித்துவிட்டு மருத்துவமனைக்கு வரும் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரை கொடுத்துள்ளார். இவரது நண்பர் கவிராஜன் எம்பிபிஎஸ் என்ற பேரில் 4 வருடமாக போலி மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் அவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

Related Stories: