×

வெளி மாவட்டங்களுக்கு செல்ல பாஸ் பெற மாநகராட்சி அலுவலகத்தில் குவியும் மக்கள்

சென்னை: சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதற்கான பாஸ் பெற மாநகராட்சி அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்டோர் எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்தனர். மேலும் பலர் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று  தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதன்படி சென்னை மாநகராட்சிக்குள் பயணம் மேற்கொள்பவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களிடம் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடமும், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் மாநகராட்சி ஆணையரிடமும் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, நேற்று காலை முதல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 500க்கும் ேமற்பட்டோர் நேரடியாக விண்ணப்பிக்க குவிந்தனர். விண்ணப்பிக்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நின்றுள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினர் உதவியுடன் பொதுமக்களை மாநகராட்சி அதிகாரிகள் சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் வைத்து உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது 500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அனுமதி கடிதம் பெற காத்திருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பெரும்பாலானவர்கள் துக்க சடங்கு மற்றும் சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் செல்ல விண்ணப்பித்து இருப்பதாக தெரிகிறது.



Tags : districts ,corporation office , People gather,corporation office, passes,outer districts
× RELATED மணிப்பூரில் 6 மாவட்டங்களில் அசாம் ரைபிள்ஸ்