வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கந்துவட்டி ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வட்டி கொடுக்காததால் குடும்பத்தினரை தவறாக பேசியதாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கந்துவட்டி ஆசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து   நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் குளோரியா. இவர், சரவணன் என்பவரிடம் ₹5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதற்காக மாதம் 10 சதவீதம் வட்டி என ₹50 ஆயிரம் செலுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 17.10.2013 அன்று, சரவணன் வட்டி வாங்குவதற்காக, குளோரியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குளோரியா வட்டி பணம் தற்போது இல்லையென்றும், கஷ்டமாக உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால், சரவணன் பணத்தை கேட்டு சத்தம்போட்டுள்ளார். மேலும், உன் மகளை வைத்து பணம் கொடு என்று ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதனால், குடும்பமே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. இதனால் அன்றிரவு குளோரியா அவரது மகள், மகன் ஆகியோர் மாத்திரை சாப்பிட்டு, கை மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், அவர் மகன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertising
Advertising

இதையடுத்து போலீசார் சரவணன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, சென்னை 17வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி டஸ்னீம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குளோரியா, அவரது மகள், கணவர் ஆகியோர் சாட்சியளித்தனர். பின்னர் மற்ற சாட்சிகளிடமும் விசாரிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ₹30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: