கணவர் தற்கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஐகோர்ட் ஜாமீன்: தொலைபேசி மூலம் விசாரித்து உத்தரவு

சென்னை: குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில், மனைவிக்கு ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தணிகைவேலன். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 19 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். தணிகைவேலனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26ம் தேதி மது அருந்திவிட்டு வந்த தணிகைவேலன் தனது மனைவி மற்றும் மகளை அடித்துள்ளார். பின்னர் தனது அறைக்கு சென்று தூங்கியுள்ளார். காலையில் பார்க்கும்போது அவர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து, ரேகாவை கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ரேகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேகா தரப்பில் வக்கீல் வி.ஜி.அன்பரசு ஆஜரானார். தணிகைவேலன் மரணத்திற்கும், மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் குடித்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவித்தார்.

Advertising
Advertising

  அப்போது, அரசு தரப்பில் வக்கீல் முகமது ரியாஸ் தொலைபேசி மூலம் ஆஜராகி, தணிகைவேலன் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்ததால் மரணம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் சிறையில் உள்ளார். அவருக்கு திருமணமாகாத மகளும், மைனர் மகனும் உள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் பரவல் நேரம் என்பதை கருத்தில்கொண்டு ரேகாவுக்கு ₹10 ஆயிரம் பிணைத்தொகையில் சொந்த ஜாமீன் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Related Stories: