அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக போக்குவரத்து ஊழியர்களின் 3 நாள் சம்பளம் பிடித்தம்: முதல்வர் தலையிட சிஐடியு கோரிக்கை

சென்னை: அதிகாரிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக போக்குவரத்துத்துறை ஊழியர்களின் 3 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், சிஐடியு  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் 10, 11 தேதிகளில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைக்காக 2 நாட்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பின்பு அரசு மார்ச் 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. அதற்குப்பின் ஏற்பட்ட சூழ்நிலையை கருதி  பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது. தொழிற்சங்கங்களும் அரசின் நிலையை புரிந்துகொண்டு நாட்டு நலனுக்காக தங்களது கோரிக்கையை வலியுறுத்தவில்லை.   ஆனால், இந்த நேரத்திலும் கூட பழிவாங்கும் அடிப்படையிலும், வஞ்சிக்கும் அடிப்படையிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் நடந்து கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது. வார ஓய்வை கூட மறுத்து சம்பளத்தை பிடித்துள்ளது. அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கை காரணமாகத்தான் போக்குவரத்துக் கழகங்களில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

Advertising
Advertising

அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதும், வேலையே பார்க்காதவர்களுக்கு தொழிலாளர்கள் உழைத்த பணத்தை அள்ளி கொடுப்பதும் அவர்களது லஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு துணை நிற்பதும் தொடர்ந்து நடைபெற்று கடினமாக பணி புரியும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் நிலை தொடர்கிறது.நாட்டின்நிலமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகளின் வழக்கமான செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிகப்பெரிய சமூக சிக்கல் எழுந்துள்ள நிலையில் அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொழிலாளர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அளிப்பதாக கூறினர். அரசின் நடவடிக்கைகளுக்கு  தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கவும் தயார் என்று அறிவித்த நிலையில் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் தலையிட்டு அதிகாரிகளின் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Related Stories: