கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பேருந்து நிலையங்கள் மார்க்கெட்டாக மாற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வைரஸ் தொற்றை தடுக்கவும் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினமும் காலை நேரங்களில் காய்கறி கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காய்கறி மார்க்கெட்டுகள் குறுகிய இடங்களில் செயல்படுவதால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதே நிலை நீடித்தால் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்று தமிழக அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. குறிப்பாக சென்னையில் இதை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, முக்கிய காய்கறி மார்க்கெட்களை மூடிவிட்டு, அவற்றை அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களுக்கு மாற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நேற்று வில்லிவாக்கம், ராயபுரம் பேருந்து நிலையங்கள் மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து முக்கிய பேருந்து நிலையங்களை மார்க்கெட்டாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையங்களில் 6 அடி அளவில் இடைவெளியில் வட்டம் போடப்பட்டுள்ளது. தேவையான இடம் இருப்பதால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் இந்த வட்டத்தில் நின்று சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று மார்க்கெட் மற்றும் நடைபாதையில் கடை போட்டவர்களுக்கும் பேருந்து நிலையங்களில் கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட இடைவெளி மற்றும் பொதுமக்கள் வரிசையில் நிற்க சமூக இடைவெளி ஆகியவை உணர்த்தும் வகையில், பெயின்ட் மூலம் வட்டங்கள் போடப்பட்டுள்ளன.  இனி, பஜார் பகுதியில், காய்கறி, பழம் கடைகள் இயங்காது எனவும், அவை, பேருந்து நிலையத்தில் செயல்படும் எனவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: