×

கொரோனாவின் தாக்கத்தை தடுக்க ரயில் பெட்டிகளில் அமைக்கப்படும் மாதிரி சிறப்பு வார்டு 2 நாளில் தயாராகிவிடும்: அதிகாரி தகவல்

சென்னை: பெரம்பூரில் உள்ள ரயில்வே தொழிற்சாலையில் ரயில் பெட்டிகளை கொரோனா தடுப்பு மாதிரி சிறப்பு வார்டாக மாற்றும் பணி 2 நாட்களில் நிறைவடையும், என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இதுகுறித்து ரயில்வே பணிமனை துணை இயக்குனர் வெங்கடாஜலபதி கூறுகையில், ‘‘ரயில் பெட்டியை கொரோனா தடுப்புக்கான மாதிரி சிறப்பு வார்டாக மாற்றும் பணி 2 நாளில் நிறைவடையும். இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் 8 பெட்டிகளை சிறப்பு வார்டாக மாற்றும் பணியில் கேேரஜ் தொழிற்சாலை ஈடுப்படும்,’’ என்றார்.

இந்த சிறப்பு வார்டில் இடம்பெறும் வசதிகள் குறித்த விவரம்:
* ஒரு கேபினுக்கு ஒருவர் வீதம் ெமாத்தம் உள்ள 9 கேபின்களில் சிறப்பு வார்டுக்கான வசதிகள் செய்யப்படுகிறது. ரயில் பெட்டியின் முதன்மை கதவுக்கு அடுத்துள்ள அனைத்து தடுப்புகளும் நீக்கப்பட்டுள்ளன.
* ரயில் பெட்டியின் கழிவறைகளில் ஒன்று குளியலறையாக மாற்றப்படுகிறது. கை கழுவும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.
* மேல் படுக்கைகளில் ஏறுவதற்காக பயன்படுத்தப்படும் ஏணிகள் நீக்கப்பட்டு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வைக்கும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
* 110 வோல்ட் சுவிட்ச்சுகளை மாற்றி 230 வோல்ட் மின்சார வசதி வழிவகை செய்து, லேப்டாப், மொபைல்களை சார்ஜ் செய்வதற்கான வசதி செய்யப்படுகிறது.
* அனைத்து ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் விடுதிகளில் 700க்கும் மேற்பட்ட படுக்கை வசதியை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், எழும்பூர், பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தயாராக உள்ளன.
* மருத்துவமனைகளுக்கு தேவையான கட்டில்களை தயார் செய்யும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி 100 படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன.

Tags : Sample Special Ward , corona, train , boxes, Sample Special Ward ,ready in 2 days
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...