கல்லூரிகளுக்கு 14ம் தேதி வரை விடுமுறை: உயர்கல்வி செயலாளர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசின் சார்பில் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படாது என்று மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில், தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதனால் இன்று முதல் வழக்கம் போல கல்வி நிறுவனங்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.

எனவே, உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வ வர்மா சார்பில் அனைத்து பல்கலைக் கழக பதிவாளர்கள், கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் அவசர கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், அரசு அறிவித்துள்ளபடி ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை பல்கலைக் கழகங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள், அனைத்து வகை கல்லூரிகள் இயங்காது.

Related Stories: