சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுகிறதா?: சென்னை சாந்தோம் அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி திடீர் ஆய்வு

சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டி உள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி வலியுறுத்தினார். அன்றைய நாள், நாடு முழுவதும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டன. பஸ், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வைரஸ் பரவுவது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டுக்கு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று (24-ம் தேதி) நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. உங்கள் வீட்டை சுற்றி லட்சுமண கோடு போடப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் அதை தாண்டாதீர்கள். 21 நாட்களுக்கு வேறெதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். இந்த ஊரடங்கு மக்களை காப்பாற்றுவதற்கு தான். அதற்காக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

தொடர்ந்து தமிழகத்தில் 31-ம் தேதி வரை அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பால், காய்கறிகள், குடிநீர்,மருந்து, உணவு பொருட்கள், பெட்ரோல், இறைச்சி, மீன், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. உணவங்களில் அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்மா உணவகங்கள் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்திற்கு நேரில் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப் படுகிறதா? என்பது குறித்தும் உணவின் தரம், சமையலறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறாதா? அம்மா உணவகத்தில் உரிய இருப்பு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். பொங்கல் வாங்கி சாப்பிட்டு உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் சென்னை கலங்கரை விளக்கம் அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார். 200க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சென்னையில் இயங்கி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: