டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களால் ஆந்திராவில் ஒரே நாளில் 17 பேருக்கு வைரஸ் பாதிப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரே நாளில் 17 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆந்திர மாநில அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 693 பேர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதில் 262 பேர் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதுவரை 748 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 11, குண்டூர் மாவட்டத்தில் 9, விசாகப்பட்டினம் 6,  கிருஷ்ணா 5,  கிழக்கு கோதாவரி 4,  அனந்தபுரம் 2, சித்தூர், கர்னூல், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் என மொத்தம் 40 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று முன்தினம் வரை 23 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 17 பேரும் டெல்லியில் நடந்த மத வழிபாட்டிற்கு சென்று வந்தவர்களும்,   அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடந்த மத வழிபாட்டில்  ஆந்திர மாநிலத்திலிருந்து 711 பேர் சென்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 122 பேர் மருத்துவமனைகளிலும், 207 பேர் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட  பகுதியிலும், 297 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 85 பேர் எங்கு உள்ளார்கள் என்பது குறித்து தெரியப்படாத நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் சித்தூர் மாவட்டம் 20, அனந்தபுரம் 1, கடப்பா 17, குண்டூர்  22, குண்டூர் புறநகர் 20, கிருஷ்ணா 1, மேற்கு கோதாவரி 1, ராஜமகேந்திரவரம் 3 பேர் என மொத்தம் 85 பேர் எங்கு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் தேடி வருகின்றனர்.

Related Stories: