கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாஜி எஸ்ஐ சாவு: கேரளாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவுக்கு நேற்று மாஜி போலீஸ் எஸ்ஐ பலியானார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் இருந்து திரும்பிய, இப்ராகிம் சுலைமான் சேட் (69) என்பவர் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதேபோல், திருவனந்தபுரம் அருகே போத்தன்கோட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் அசீஸ்(69), கொரோனா அறிகுறியால் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். முதல் பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது சோதனையில்  இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இவரது உடல்நிலை மோசமானது. இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு உள்பட பல நோய்கள் இருந்தன. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் இறந்தார். இதையடுத்து கேரளாவில் கொரோனா பலி 2 ஆக உயர்ந்துள்ளது. இவருக்கு இந்த நோய் எப்படி பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ் உள்பட 10 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அப்துல் அசீஸ் இறந்த போத்தன்கோடு பஞ்சாயத்து முழுவதும் சீல் வைக்கப்பட்டது. 2 கி.மீட்டர் சுற்றளவில் 2 வாரத்திற்கு யாரும் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை வென்ற 90 வயது தம்பதி:

கேரள மாநிலம் பத்தனம்திட்டா ரானி பகுதியை சேர்ந்தவர் தாமஸ்(93). இவரது மனைவி மரியம்மா(88). இவர்களது மகன் ஆபிரகாம்(55), தனது மனைவி மகனுடன் இத்தாலியில் வசித்து வந்தார். இத்தாலியில் கொரோனா பரவிய நிலையில் இவர்கள் 3 பேரும் கடந்த மாதம் ஊருக்கு திரும்பினர்.  இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  அவர்கள் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனை தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மூலம் பெற்றோருக்கும் கொரோனா பரவியது.

இதையடுத்து தாமஸ் மற்றும் மரியம்மா கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் ஒருசில தினங்களுக்குள் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும்:

கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு கஜானா காலியாகி வருகிறது. வரிகள் மூலம் கிடைக்க வேண்டிய பணம் முடங்கிவிட்டது. ஏப்ரல் மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கஜானாவில் பணம் இருக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது. ெகாரோனா நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது.

இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டான இந்த சூழலில் இருந்து அரசை காப்பாற்ற ஊழியர் சங்கத்தினர் முன்வர வேண்டும். அரசு ஊழியர்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்க வேண்டும். இதை ஒரேயடியாக வழங்காமல் கட்டம் கட்டமாக கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

1000 முன்னணி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்:

பிரதமர் மோடி, கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு நன்கொடை வழங்க குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியை (PM-CARES) உருவாக்கி, பொதுமக்கள் தாராளமாக நன்கொடை அளிக்க கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிதி தற்போதைய துன்பகரமான சூழலை சமாளிக்கவும், எதிர்காலத்தில் இது போன்ற ஆபத்துகளை சமாளிக்கவும் உதவும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், கார்பரேட் விவகாரங்களுக்கான செயலாளர் இன்ஜெடி னிவாஸ் நாட்டில் முன்னணியில் உள்ள 1,000 பெரிய நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில், `பிஎம்-கேர்ஸ்க்கு அளிக்கப்படும் நிதிக்கு பெரிய நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு செலவினத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும். நிறுவனங்கள் அளிக்கும் தொகை, நாட்டின் பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நிறைவேற்றவும் அரசுக்கு உதவியாக இருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஊக்கப்படுத்தும் நடிகர்கள்:

கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டோர், சிகிச்சை அளிக்கும் மருத்துவத்துறையினரின் மன உளைச்சலை போக்க, அவர்களிடம் நடிகர்கள் போனில் பேசும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி காசர்கோடு மாவட்டத்தில் உள்ள டாக்டர் கணேஷ், நர்ஸ் திவ்யா, சிகிச்சையில் உள்ள 10ம் வகுப்பு மாணவி, திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் உள்ள ஒருவர், பாலக்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பத்தனம்திட்டாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சவுதி அரேபியாவில் இருந்து வந்த நர்ஸ் உள்ளிட்டோரிடம் போனில் தொடர்புக் கொண்டு பேசினார். நேற்று நடிகை மஞ்சு வாரியார் பேசினார். கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாபி பரம்பில் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

Related Stories: