ஊரடங்கில் சும்மா இருக்காமல் அத தொட்டீங்கன்னா கொரோனா கன்பார்ம்: மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை

புதுடெல்லி: ஊரடங்கின்போது சலிப்பை போக்குவதற்காக தேவையற்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 32 பேர் பலியாகியுள்ளனர். 1251 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நோய் தொற்றால் ஏற்படும் இந்த பாதிப்பை தவிர்ப்பது எப்படி என்பது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் ேநாக்கமே கொரோனா நோய் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்கத்தான்.

எனவே நாம் நம்மை பாதுகாப்பதுடன் மற்றவர்களையும் பாதுகாப்பது அவசியம். எனவே பொதுமக்கள் அவசியம் ஏற்பட்டாலன்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது. குறிப்பாக அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செல்ல நேரிடும் போதும் நல்ல ஆரோக்கியமான குடும்ப உறுப்பினர் வெளியே சென்று வரலாம். வீட்டில் உள்ள எவரேனும் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு அருகேயுள்ள சுகாதார நிலையங்களில் சிகிச்சை அளிக்கவேண்டும்.  ஊரடங்கின்போது ஏற்படும் சலிப்பை போக்க புகைப்பிடிப்பது, புகையிலை பயன்படுத்துவது, மது அருந்துவது போன்றவற்றை செய்யக்கூடாது. ஏனெனில் இந்த பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் குறைத்து கொரோனா தாக்குதலுக்கு வழி செய்துவிடும்.

பாதுகாப்பாக இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானால் பீதியடையக்கூடாது. அவ்வாறு பாதிப்பு ஏற்படும்போது தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர் ஆலோசனையின் பேரில் மருந்து உட்கொள்ள வேண்டும். தனிமைபடுத்திக் கொள்ள மிகச்சிறந்த இடம் வீடுதான். வீட்டில் இருக்கும்போது போர் அடித்தால் இசையை ரசித்தல், புத்தகங்கள் மற்றும் செய்திதாள்களை வாசித்தல், தங்களுக்கு விருப்பமான தொலைக்காட்சி பொழுதுபோக்கு அம்சங்களை ரசிக்கலாம். வீட்டுக்குள்ளே செய்யக்கூடிய உடற்பயிற்சியையும் செய்யலாம்.

மேலும் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பரவும் புரளிகளை ஒதுக்கிவிட்டு உண்மையான செய்திகள் மீது கவனம் செலுத்தலாம். உறுதிப்படுத்தப்படாத தகவல் மற்றும் செய்திகளை பரப்பவோ ஷேர் செய்யவோ கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தும்மல் மற்றும் இருமல் ஏற்படும்போது டிஷ்யூ பேப்பரை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: