×

கேரள அரசு விநோத உத்தரவு மது குடுக்கணும்... ஆனா கடைய திறக்க கூடாது...

திருவனந்தபுரம்: கொரோனா  வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ‘லாக்-டவுன்’  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் கடந்த வாரம் அரசு  மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் மன  அழுத்தத்துக்கு உள்ளான 6 பேர்  தற்கொலை செய்து  கொண்டுள்ளனர். இதையடுத்து மதுவுக்கு அடிமையானவர்களுக்கு  டாக்டர்களின் அறிவுரைப்படி மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள  முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு இந்திய மருத்துவ  சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு கேரள அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: குடிக்கு  அடிமையானவர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரைப்படி மது வழங்கப்படும்.

மது  கிடைக்காததால் மன உளைச்சல் உட்பட அவதியில் தவிப்பவர்கள் அரசு  மருத்துவமனைக்கு சென்று புறநோயாளிகள் சீட்டு பெற்று டாக்டர்களிடம்  பரிசோதிக்கலாம்.
இஎஸ்ஐ உட்பட ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா,  மாவட்ட, பொது மற்றும் சிறப்பு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி  மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும் தங்களை பரிசோதித்து  கொள்ளலாம். அந்த நபர் மது குடிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என  மருத்துவர் சான்று அளித்தால், அதனை கலால்துறை சரக ஆய்வாளர் அலுவலகத்தில்  அளிக்க வேண்டும். மேலும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை அல்லது  ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்றை அடையாள அட்டையாக கொடுக்க வேண்டும்.  பின்னர் இவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மது வழங்கப்படும்.

இதற்கு கேரள  மதுபான விற்பனை கழக இயக்குநர் நடவடிக்கை ேமற்ெகாள்ள வேண்டும். ஆனால் மது  கொடுக்க மதுக்கடைகளை திறக்கக்கூடாது. மது விற்பனை சட்டத்தின்படியே மது  வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி ஒருவர் அதிகபட்சமாக 3 லிட்டர் மது  வைத்திருக்கலாம். ஆனால் இந்த உத்தரவில் மது எங்கிருந்து கொடுக்க வேண்டும்  என குறிப்பிடப்படவில்லை. ஏற்கனவே அரசு இந்த முடிவை எடுத்தபோதே கேரள  டாக்டர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த  நிலையில் மேலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கேரள  டாக்டர்கள் சங்கத்தினர் கூறியதாவது: எக்காரணம் கொண்டும் அரசின் இந்த  நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. மது வழங்க யாருக்கும் நாங்கள்  பரிந்துரைக்க முடியாது. இதற்காக அரசு நடவடிக்கை எடுத்தால் சட்டப்படி  எதிர்கொள்வோம் என்றனர்.


Tags : government ,Kerala , Government of Kerala, Liquor, Coronavirus
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...