கொரோனா பரவிய சீனாவின் வுகான் சந்தை மூடல்

வுகான்: சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படும் ‘ஹூனான்’ கடல்உணவு சந்தை தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் உள்ளது வுகான் நகரம். இங்கு ஹூனான் என்ற இடத்தில் கடல் உணவு சந்தையில் இருந்துதான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இது ‘கிரவுண்ட் ஜீரோ’ மார்க்கெட் என்றழைக்கப்படுகிறது. இங்கு கடல் உணவுகளுடன் வனவிலங்கு குட்டிகளும் உயிரோடு விற்கப்பட்டுள்ளன. எலிகள், பாம்புகள், நரி குட்டிகள் உட்பட அனைத்து வகையான வனவிலங்குகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டதற்கு இங்குள்ள கடையின் விலைப்பட்டியல் சான்றாக கிடைத்துள்ளது. இது கடந்த ஜனவரியில் இன்டர்நெட்டில் வைரலாக பரவியது.

சீனாவில் ஏராளமானோர் வனவிலங்குகளை உணவாக சமைத்து சாப்பிட்டுள்ளனர். பாரம்பரிய மருந்துகள் தயாரிப்பதற்கும் வனவிலங்குகளின் மாமிசங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் எல்லாமே அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்படாதவை. ஆனால் இந்த ஹூனான் சந்தை, வனவிலங்குகள் விற்பனைக்கு பிரபலமான சந்தையாக இருந்துள்ளது. இங்கு ஏதோ ஒன்று விஷமாகி கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாகிவிட்டதாக நம்பப்படுகிறது.  கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் என அமெரிக்காவும், அமெரிக்கா ராணுவம்தான் காரணம் என சீனாவும் மாறி மாறி குற்றம் சாட்டி கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த ‘கிரவுண்ட் ஜீரோ’ சந்தை இருந்த இடத்தை  போலீசார் சீல் வைத்து தடுப்புகள் அமைத்து மறைத்து சுற்றிலும் சிவப்பு நிற நாடாக்களை கட்டியுள்ளனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் முழு கவச உடையில் நிற்கின்றனர்.  இந்த இடத்தை நிரந்தரமாக மூட சீனா முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த சந்தையை இடிப்பதற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை. சீனாவில் வனவிலங்கு விற்பனைக்கு ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரவுண்ட் ஜீரோ சந்தை அருகேயுள்ள தெருக்கள் எல்லாம் ெவறிச்சோடி கிடக்கின்றன. இங்கு நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுகுறித்து இங்குள்ள சீனா அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், ‘‘உள்ளூர் மக்கள் இந்த சந்தை அருகே வரும்போது பயப்படுவதாக நான் நினைக்கவில்லை’’ என்றார்.

Related Stories: