கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி கொடுக்க தடையா?

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி கொடுக்க தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், சுகாதார துறை ஊழியர்கள் தீவிரமாக செய்து வந்தனர். தினசரி அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வந்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிக்காமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை புள்ளி விவரங்களோடு கூறி வந்தார்.

இது பல்வேறு தரப்பினரிடம் வைரலாக பரவியது. இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றிய பல மீம்ஸ்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் விஜயபாஸ்கர் மகள் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடனம் ஆடிய வீடியோவும் வெளிவந்தது. இந்த பரபரப்பான நிலையில், கடந்த மூன்று நாட்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பதை தவிர்த்து வருகிறார். மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ் தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் மீடியாக்களுக்கு தெரிவித்து வருகிறார்.

இதுபற்றி தலைமை செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கவோ, தகவல்களை கூறவோ மேலிடம் தடை விதித்துள்ளதாக கூறினர். இதற்கான காரணம், குறித்து ஒரு மூத்த அமைச்சரிடம் விசாரித்தபோது அவர் கூறியதாவது:

மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படிதான், தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  மேலும், தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறித்து தகவல் அரசு சார்பில் வெளியிடாமல், அமைச்சரின் டிவிட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டு வந்தார். இதுபோன்ற நடவடிக்கைகளால், அமைச்சரின் செயல்பாடுகளை ஸ்பெஷலாக சமூக வலைதளங்களில் சிலர் புரமோட் செய்ய ஆரம்பித்தனர்.

இதுபற்றி உளவுத்துறை விசாரித்தபோது, அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் தனியாக ஐடி விங் ஒன்று ஏற்படுத்தி பல்வேறு வீடியோக்களை பதிவு செய்து வெளியில் பப்ளிசிட்டிக்காக அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக மலையாளம் உள்ளிட்ட வேறு மொழி மீடியாவிலும் விஜயபாஸ்கரின் தினசரி செயல்பாடுகள் குறித்து பாராட்ட தொடங்கினர். அவரின் நடவடிக்கைகள் கட்சி மேலிடத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான் கடந்த மூன்று நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர், மீடியா பேட்டியை தவிர்த்து வருகிறார்.

மேலும், அவர் தரையில் அமர்ந்து சாப்பிட்டது உள்ளிட்ட நிகழ்வுகளும், அதுதொடர்பாக வெளியான போட்டோக்களும் அவரது புரமோஷன் வேலையாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல இப்போதும் கொரோனாவை பயன்படுத்தி, அமைச்சர் தன்னை புரமோட் செய்வதில் குறியாக இருப்பதாக சீனியர் அமைச்சர்கள் சிலர் மத்தியிலேயே புகைச்சல்கள் கிளம்பி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் அவருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பேட்டியளிக்க அமைச்சருக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக கூறுவது சரியல்ல. எப்போதும் போல அவசியம் ஏற்பட்டால்  அமைச்சர், செய்தியாளர்களை சந்திப்பார் என்றார்.

Related Stories: