கொரோனா வைரசை விட கொடியது பீதி: பொய் தகவல், புலம்பெயர்வோரை தடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘‘வைரசை விட அதுதொடர்பான பீதி அதிக உயிர்களை கொன்றுவிடும். எனவே பொய் தகவல் பரவுவதையும், புலம்பெயர்வோரையும் தடுக்க 24 மணி நேரத்தில் உண்மை தகவல்களை வெளியிடும் இணையதளத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்’’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் புலம்பெயர்வது புதுப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சிலர் பொய்யான தகவல்களாலும், கொரோனா பாதிப்புள்ள நகரங்களில் இருந்து நடைபயணமாகவே அண்டை மாநிலங்களுக்கு செல்ல முற்படுகின்றனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு அறிக்கை தர உத்தரவிடப்பட்டது. இதன்படி, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி நாகேஸ்வரராவ் ஆகியோர் முன்பு வீடியோ கான்பரன்சிங் மூலமாக இம்மனு நேற்று மீண்டும் விசாரிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அறிக்கை சமர்பித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘நாடு முழுவதும் 4.14 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பீதியால் மீண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சிக்கிறார்கள். இவ்வாறு புலம்பெயர்வதை அரசு அனுமதிக்கவில்லை. ஏனெனில் கிராமப்புறங்கள் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை. இவ்வாறு மக்கள் கூட்டமாக புலம்பெயர்ந்தால் அதில் 10 பேரில் 3 பேர் வைரசை பரப்ப வாய்ப்புள்ளது.

எனவே அனைவரும் மாநில எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. புலம்பெயர்வோர், கூலித்தொழிலாளர்கள் என சுமார் 22 லட்சத்து 88 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புலம்பெயர்வோர் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் வழங்கவும் அரசு ஏற்பாடு செய்யும்’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: வைரசை விட அதுதொடர்பான பீதி பல உயிர்களை கொன்று விடக் கூடிய கொடுமையானது. எனவே, நாடு முழுவதும் தற்காலிக தங்குமிடத்தில் உள்ள புலம்பெயர்வோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்த பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், மத தலைவர்கள் மூலமாக அரசு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.

இந்த தற்காலிக தங்குமிடங்கள் தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக போலீசாரை கொண்டு, அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தக் கூடாது.

மக்கள் புலம்பெயர்வதை தடுத்து அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகளை அரசு செய்து தர வேண்டும். மேலும், வைரஸ் தொடர்பான தகவல்கள், புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல்கள், அவர்களுக்கான வசதிகள் குறித்த அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களை தர 24 மணி நேரத்திற்குள் இணையதளம் ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும். புலம்பெயர்வோர் தொடர்பான பிரச்னையை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கும்பலாக கிருமிநாசினி தெளிப்பதால் பயனில்லை

உபி மாநிலம் பரேலியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு ஊர் திரும்பிய தொழிலாளர்களை கும்பலாக அமரவைத்து அவர்கள் மீது அதிகாரிகள் கிருமி நாசினியை தெளித்த வீடியோ காட்சிகள் வைரலானது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று தனது உத்தரவில், ‘‘புலம்பெயர்பவர்களை கும்பலாக அமர வைத்து அவர்கள் மீது தண்ணீரையோ, கிருமிநாசினியையோ பீய்ச்சி அடிப்பதால் எந்த நன்மையும் ஏற்படாது. அதோடு இது சரியான முறையும் அல்ல’’ என கூறி உள்ளது.

Related Stories: