×

கொரோனாவால் நிதி நெருக்கடி: வீரர்களுக்கான ஒப்பந்தம் தள்ளிவைப்பு: கிரிக்கெட் ஆஸி. முடிவு

மெல்போர்ன்: கொரானா பீதியால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற வருவாய், நிதி நெருக்கடி காரணமாக வீரர், வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்தத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தள்ளி வைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விளையாட்டு போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பீதியால் இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகள் ஏதாவது நடக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அதனால் போட்டிகளை ஒளிபரப்புவது உள்ளிட்ட அம்சங்களால் கிடைக்கும் வருவாய்  குறித்து முடிவு செய்ய முடியாமல் கிரிக்கெட் வாரியங்கள் திணறி வருகின்றன.

இந்நிலையில் வீரர், வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்தத்தை கிரிக்கெட் ஆஸ்திரேலியோ (சிஏ) தள்ளி வைத்துள்ளது.  வழக்கமாக  புதிய ஒப்பந்தம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். பழைய ஒப்பந்தம் ஜூன் வரை அமலில் இருக்கும் என்பதால் புதிய ஒப்பந்தம் ஜூலையில்  அமலுக்கு வரும். இடையில் மாநில சங்கங்கள் வசதியை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல்முறையாக வீரர், வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்தத்தை  மார்ச் மாதமே வெளியிட சிஏ முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா பீதியால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால்  நிதி வருவாய் குறித்து நிச்சயமற்றதன்மை நிலவுகிறது.

அதனால் புதிய ஒப்பந்தத்தை ஏப்ரல் இறுதிக்கு  தள்ளி வைப்பதாக சிஏ  அறிவித்துள்ளது. இந்த முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும்  ஏற்றுக் கொண்டுள்ளது. ஆஸி. மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மெக் லானிங், ‘உலகில் இந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை உள்ளது. எனவே நிதானித்து என்ன நடக்கிறது, என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டி உள்ளது. சிஏ உடன் நாங்கள் இணைந்து பணியாற்றுகிறோம். இந்த நேரத்தில் அடுத்து என்ன செய்வது என்பதற்காக காத்திருக்க வேண்டி உள்ளது’ என்று கூறியுள்ளார்.

Tags : crisis ,Cricket Aussie ,Corona , Corona, financial crisis, Cricket Australia
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...