டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா அறிகுறி நாடு முழுவதும் பட்டியல் தயாரிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றதில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 8 பேர் கொரோனா தாக்கி பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் வாரியாக பங்கேற்றவர்கள் பட்டியல் தயாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட முஸ்லிம் மத அமைப்பான தப்லிக் ஜமாத்தின் உலக அளவிலான கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் மலேசியாவில் 4 நாட்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் 16 ஆயிரம் மத குருமார்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் மலேசியாவில் மட்டும் 620 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது எதுவும் தெரியாத நிலையில் தப்லிக் ஜமாத்தின் இந்திய அளவிலான கூட்டம் மார்ச் 1 முதல் 15 வரை டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நடந்தது. இந்த கூட்டத்திலும் மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கானோர் தினசரி பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இந்த கூட்டத்தில் 1500 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பில்  பங்கேற்றவர்கள், அந்த மாநில நிகழ்ச்சி முடிந்ததும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர். இப்படி 15 நாள் நடந்த இந்த மாநாட்டில் மலேசியா மற்றும் தாய்லாந்தில் இருந்து பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் மூலம் கொரோனா பரவியிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் மூலம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இந்த மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரவியது. மத நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும்  மசூதிக்குள் 3400 ேபர் வரை தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மார்ச் 20ம் தேதி இங்கிருந்து சென்ற இந்தோனேஷியாவை சேர்ந்த 10 பேருக்கு தெலங்கானாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த தகவல் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் பிரதமர் மோடி நாடு முழுவதும் மார்ச் 22ல் ஊரடங்கை அறிவித்ததை அடுத்து அங்கிருந்து 1500 பேர் தங்கள் சொந்த மாநிலத்திற்கு அவர்களுக்கு என்று மத கூட்டத்திற்காக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் சென்றனர். இந்த வகையிலும் கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. இதற்கிடையே மாநாட்டில் பங்கேற்று ஒவ்வொரு மாநிலமாக சென்றவர்களுக்கு கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டதும் மத மாநாடு குறித்த தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.  

இந்தியா முழுவதும் இந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் கொரோனா தாக்கி பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் தப்லிக் ஜமாத் அமைப்பின் காஷ்மீர் தலைவரும் பலியாகி விட்டார். தெலங்கானாவில் மட்டும் இந்த மாநாட்டில் பங்கேற்ற 6 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகி உள்ளனர்.

இதையடுத்து நாடு முழுவதும் இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை, அவர்களது குடும்பத்தினரை கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலத்திலும் தாமாக முன்வந்து கொரோனா சோதனைக்கு ஒத்துழைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தப்லிக் ஜமாத் ஒரு அறிமுகம்:

1927ம் ஆண்டு இந்தியாவில் அரியானா மாநிலம் மேவாட்டில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தப்லிக் ஜமாத் என்ற அமைப்பு. தப்லிக் ஜமாத் என்றால் மக்களை அடைதல் என்று அர்த்தம். இதை தொடங்கியவர் முகமது இலியாஸ் - அல் - கந்தல்வி. 20ம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமான அமைப்பு. சன்னி இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தது. மதவழிபாடு, ஆடைகள், தனிப்பட்ட வாழ்க்கை முறைகளை மட்டும் கற்றுக்கொடுக்கக்கூடியது

16 ஆயிரம் ேபர் பங்கேற்பு:

மலேசியாவில் 4 நாள் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 16 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த மாநாடு மூலம் மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், இந்தியா உள்பட 6 நாடுகளில் கொரோனா பரவியதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மலேசியாவில் மட்டும் மாநாட்டில் பங்கேற்ற 620 பேருக்கு வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புரூனேயில் 73 பேரும், தாய்லாந்தில் 10 பேரும் இந்த மாநாட்டில் பங்கேற்றதால் பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் மாநாட்டில் கலந்து கொண்ட 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 27 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related Stories: