இந்தோனேசியர்கள் சென்று வந்த 5 மசூதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல்வைப்பு: சேலத்தில் அதிரடி

சேலம்: கொரோனா பாதித்த இந்தோனேசியர்கள் சென்று வந்த 5 மசூதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்தோனேசியாவில் இருந்து வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் உட்பட 16 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதில், 61 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்தோனேசியர்கள் மதபோதனைக்காக சென்ற களரம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, சன்னியாசிகுண்டு, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைகள்  மேற்கொள்ளப்பட்டது.

350க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஏற்கனவே 19 பேர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மேலும் 4பேர், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்தோனேசியர்கள் சென்று வந்த 5 மசூதிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மசூதிகளை சுற்றியுள்ள 25 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மசூதிகளை சுற்றியுள்ள சுமார் 5 கிலோ மீட்டர் பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  அந்த பகுதிகளில் நேற்று காலை ‘சீல்’ வைத்தனர்.

இங்குள்ள பொதுமக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை வெளியே சென்று பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் யாரும் அந்த பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை.  அந்த பகுதியில் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று வெளி நாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பு உள்ளதா? கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பு உள்ளதா? என்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.   

Related Stories: