மார்க்கெட்டுகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம்; நெல்லை, தூத்துக்குடியில் காய்கறி தொகுப்பு கிடைக்குமா?... பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கூட்டம் சில இடங்களில் இயல்பாக கூடி வருகிறது. குறிப்பாக காலை நேரத்தில் காய்கறி சந்தைகள், 10 மணிக்கு பின்னர் பலசரக்கு கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக காய்கறிகளை வாங்கிட படையெடுக்கின்றனர்.

நெல்லை, தூத்துக்குடியில் பலசரக்குகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தே பெற்றிடும் வகையில் சிற்சில கடைளின் செல்ேபான் எண்கள் தரப்பட்டு, அதன்படி வீடுகளுக்கு பலசரக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் காய்கறிகள் வாங்கிட பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு காலை நேரத்தில் கூடுவதை தவிர்க்க முடியவில்லை. மகராஜநகர், மேலப்பாளையம் உழவர்சந்தைகள், டவுன், பாளை மார்க்கெட்டுகளை மூடி அவற்றிற்கு மாற்று இடங்கள் மைதானம் அளவில் தரப்பட்டும், ஒரு சில இடங்களில் மக்கள் வட்டத்தை தாண்டி வழக்கம்போல் காய்கறி வாங்கி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் ஒவ்வொரு காய்கறிகளையும் தனித்தனி கடைகளில் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதே காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக பல்லாரி, உள்ளியை ஒரு கடையிலும், வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றை மற்றொரு கடையிலும், மல்லி, கறிவேப்பிலை, கீரை ஆகியவற்றை தனித்தனி கடைகளிலும் வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். இத்தகைய பிரச்னைகளை தவிர்க்க காய்கறி தொகுப்பு கிடைத்தால் நல்லதாக இருக்கும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

தேனி உழவர் சந்தையில் தற்போது ரூ.150க்கு காய்கறி தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் கத்தரிக்காய், அவரைக்காய், பச்சை மிளகாய், உருளைகிழங்கு, பல்லாரி உள்ளிட்டவை ஒரு கிலோவும், தக்காளி ஒரு கிலோவும்,  வெண்டை, முருங்கை, பீன்ஸ், உள்ளி, முள்ளங்கி ஆகியவை ஒரு கிலோவும் இடம் பெற்றுள்ளன. இதுதவிர ஒரு கட்டு கீரையும், 3 வாழைக்காய், 4 எலுமிச்சை, கறிவேப்பிலை, புதினா, மல்லி ஆகியவை ஒரு கட்டும் இடம் பெற்றிருக்கும். தேனி பகுதி மக்கள் இந்த காய்கறி தொகுப்பை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் இத்தகைய காய்கறி தொகுப்பை ரூ.100 மற்றும் ரூ.150 என தனித்தனி விலைகளில் அமல்படுத்தினால் பொதுமக்கள் பயன்பெறுவர். ஒரு பையை வாங்கி செல்வோர் மொத்த காய்கறிகளையும் வீட்டுக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும். மார்க்ெகட்டுகளில் ஓரளவுக்கு கூட்டத்தையும் கட்டுப்படுத்தலாம். வேளாண் விற்பனைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் உழவர் சந்தைகள் மூலமே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: